பெங்களூர் மைசூர் விரைவு சாலையில் குறையும் விபத்துகள்

பெங்களூரு, ஆக. 5: பெங்களூரு- மைசூரு விரைவுச் சாலையில் காவல் துறையின் நடவடிக்கைகளால் விபத்துகள் படிப்படியாக குறைந்து வருவதாக போக்குவரத்து மற்றும் சாலை பாதுகாப்பு ஏடிஜிபி அலோக் குமார் ட்வீட் செய்துள்ளார்.
கடந்த ஜூலை மாதம் அதிவேக நெடுஞ்சாலையில் நடந்த விபத்துகளில் 8 பேர் உயிரிழந்துள்ளனர். மே மாதத்தில் 29 பேரும், ஜூன் மாதத்தில் 28 பேரும் விபத்துகளில் உயிரிழந்துள்ளனர். இந்த எண்ணிக்கையை மேலும் குறைக்க காவல்துறையின் தொடர்ந்து நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர். அவர்களின் சேவையை பாராட்டுவதாக அவர் தெரிவித்துள்ளார்.
பெங்களூரு- மைசூரு விரைவுச்சாலையில் விபத்துகள் அதிகரித்ததையடுத்து, கடந்த‌ ஒரு மாதத்தில் விரைவுச்சாலையை அலோக் குமார் இரண்டு முறை பார்வையிட்டு ஆய்வு செய்தார். போக்குவரத்து விதிகளை மீறுபவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க அறிவுறுத்தினார். அதன்பிறகு விபத்துகள், உயிரிழப்புகள், காயங்கள் போன்றவை சற்று குறைந்துள்ளன.
பெங்களூரு-மைசூரு விரைவுச் சாலையில் அதிவேக விதிமீறல்களைப் பிடிக்க ரேடார் கருவிகளைப் பயன்படுத்தத் தொடங்கிய ஒரு மாதத்திலிருந்து, கர்நாடக மாநில காவல்துறை, வேகத்தடை மீறுபவர்களுக்கு எதிராக மொத்தம் 1,909 வழக்குகளைப் பதிவு செய்துள்ளது. 1,909 வழக்குகளில் பெரும்பாலானவை ராமநகர காவல்துறையால் பதிவு செய்யப்பட்டவை. பாதை விதிமுறைகளை மீறியதாக வாகன உரிமையாளர்கள் மீது சுமார் 2,654 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
அதிக எண்ணிக்கையில் பதிவுசெய்யப்பட்ட வழக்குகள் அதிக விழிப்புணர்வைக் குறிக்கின்றன. மேலும் அந்த பகுதியில் மட்டுமே விதிமீறல்கள் அதிகமாக நடப்பதாகக் கருதப்படக்கூடாது என்று ஏடிஜிபி அலோக் குமார் தெரிவித்தார். வாகனங்கள் நுழைவதைத் தடுக்க நெடுஞ்சாலையில் உள்ள பல வெளியேறும் வழிகள் மூடப்பட்டுள்ளன. இது உள்ளூர் வணிகர்களிடையே சில அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது என்றாலும், அந்த சாலையில் கணிசமாக விபத்துகள் குறைந்துள்ளது வரவேற்கத்தக்கது.