பெங்களூர் விமான நிலையம் எதிரே ஏரி போல் தேங்கிய மழைநீர்

பெங்களூரு, அக். 12- பெங்களூருவில் பெய்து வரும் கனமழையால் பல்வேறு ரோடுகள் ஆறாக மாறியது. விமான நிலையத்திற்கு வெளியே மழை நீர் தேங்கியதால் பயணிகள் சிரமபப்பட்டதோடு , கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. பெங்களூரு முழுவதும் நேற்று காலை முதல் தொடர்ந்து பெய்து வரும் கனமழையால் சர்வதேச விமான நிலையத்திற்கு வெளியே வெள்ள நீர் சூழ்ந்தது. இதனால், விமான நிலையத்திற்குள் செல்ல முடியாமல் பயணிகள் தவித்து வந்தனர். அதே போல் விமானத்தில் இருந்து வெளியே வரமுடியாமல் பயணிகள் பெரும் சிரமம் அடைந்தனர். விமானத்தை பிடிக்க காரில் வந்தவர்கள் தேங்கி நின்ற மழைநீரில் தொடர்ந்து செல்ல முடியாமல் காரை பாதியில் நிறுத்திவிட்டுச் சென்றனர். மேலும், விமான நிலையத்திற்கு வெளியே கார் செல்ல முடியாத அளவிற்கு நீர் தேங்கியுள்ளதால், காரில் வருபவர்கள் அங்கிருந்த டிராக்டர் மூலம் தங்கள் உடைமைகளுடன் விமான நிலையத்திற்குள் செல்லும் அவலநிலை ஏற்பட்டது. கனமழை காரணமாக பெங்களூருவில் இருந்து விமானங்கள் கிளம்புவதிலும் தாமதமானது. சென்னை, கொச்சி, புனே, மும்பை, ஐதராபாத் உள்ளிட்ட முக்கிய நகரங்களுக்கு செல்லும் விமானங்கள் புறப்படுவதிலும் தாமதம் ஏற்பட்டது. பெங்களூருவில் நிலவும் மோசமான வானிலை காரணமாக விமானம் தரையிறங்க தொழில்நுட்ப சிக்கல் இருப்பதால் சில விமானங்கள் தரையிறங்க அனுமதி மறுக்கப்பட்டு திருப்பிவிடப்படுவதாக தகவல் வெளியாகியுள்ளது.