பெட்ரோல், குடிநீர் மின்சாரம் தட்டுப்பாடு – தவிக்கும் மக்கள்

சென்னை: டிச-7-மிக்ஜாம் புயல் காரணமாக பெட்ரால் பங்க்குகளில் பெட்ரோல், டீசல் மற்றும் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. மேலும் பல இடங்களில் மின்தடையை கண்டித்து மக்கள் மறியலில் ஈடுபட்டனர். மின் விநியோகமும் தகவல் தொடர்பு சேவையும் பாதிக்கப்பட்டதால் ஐ.டி. நிறுவன ஊழியர்கள் கடும் அவதிக்கு ஆளாகியுள்ளனர்.மிக்ஜாம் புயல் காரணமாக சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் உள்ள சில பெட்ரோல் பங்க்குகள் வெள்ளத்தால் சூழப்பட்டன. இதனால் அங்கு பெட்ரோல், டீசல்விநியோகம் நிறுத்தப்பட்டு பங்க்மூடப்பட்டது. இருக்கும் பெட்ரோல் பங்க்குகளிலும் வாகன ஓட்டிகள் நீண்ட வரிசையில் காத்திருந்தனர். இதுகுறித்து, எண்ணெய் நிறுவன அதிகாரிகள் கூறும்போது, வெள்ளம் காரணமாக சில இடங்களுக்கு லாரிகளை கொண்டு செல்வதில் சிரமம் ஏற்பட்டுள்ளது. ஓரிரு தினங்களில் நிலைமை சீராகி விடும் என்றனர். இதேபோல் பல்வேறு பகுதிகளில் குடிநீருடன் கழிவுநீர் கலந்து வருகிறது. பல வீடுகளில் நிலத்தடி நீர்த்தேக்க தொட்டிகளிலும் கழிவுநீர் கலப்பால் சுத்தமான குடிநீர் கிடைக்கவில்லை. கேன் குடிநீர் விநியோகமும் தடைபட்டுள்ளது.புயல் காரணமாக சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் பல இடங்களில் இன்னும் மின்விநியோகம் தொடங்கப்படவில்லை. இதை கண்டித்து புளியந்தோப்பு குடிசை மாற்று வாரியம்,மகாகவி பாரதி நகர் பகுதிகளில் பொதுமக்கள் நேற்று சாலை மறியலில் ஈடுட்டனர். இதற்கிடையே, மின்வாரிய தலைவர் ராஜேஷ் லக்கானி கூறும்போது, ‘‘தண்ணீர்குறையக்குறைய மின்இணைப்பு வழங்கப்படும். 96 சதவீதம் சகஜ நிலைக்கு வந்துள்ளது’’ என்றார்.

இதனிடையே தகவல் தொடர்புசேவைகளும் துண்டிக்கப்பட்டதால் பொதுமக்கள் தங்கள் உறவினர் மற்றும் நண்பர்களை அவசர உதவிக்குக் கூட தொடர்பு கொள்ள முடியாமல் அவதிப்பட்டனர். சிறுசேரி, சோழிங்கநல்லூர் பகுதிகளைமழை வெள்ளம் சூழ்ந்ததால் தகவல் தொழில்நுட்ப (ஐ.டி.) நிறுவனஊழியர்கள் வீட்டில் இருந்து பணிபுரிய அறிவுறுத்தப்பட்டுள்ளனர். ஆனால், இணையதள சேவை பாதிப்பால் வீட்டில் இருந்து பணிபுரிய முடியாமல் ஊழியர்கள் பெரும் சிரமத்துக்கு ஆளாயினர். இதுகுறித்து, தொலைத் தொடர்பு அதிகாரிகளிடம் கூறும்போது, மின்விநியோகம் சீராக இல்லாததால் செல்போன் டவர்களை இயக்குவதில் சிரமம் ஏற்பட்டுள்ளது. இன்னும் ஓரிரு நாளில் நிலைமை சீரடையும் என்றனர்.