பெட்ரோல் டீசல் விலைரூ.10 வரை குறைக்க திட்டம்

புதுடெல்லி: டிசம்பர். 30 – நாடாளுமன்ற தேர்தல் நெருங்கும் நிலையில், பெட்ரோல் மற்றும் டீசல் விலையைக் குறைக்க எண்ணெய் நிறுவனங்களுடன் ஒன்றிய அரசு ஆலோசனை நடத்தி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. லிட்டருக்கு ரூ.10 வரை குறைக்கப்படலாம் என கூறப்படுகிறது. பெட்ரோல், டீசல் விலை தொடர்ந்து உச்சத்தில் உள்ளது. கடந்த 2022ம் ஆண்டு மே 22ம் தேதி சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.110.85ல் இருந்து ரூ.102.63ஆக குறைக்கப்பட்டது. இதுபோல் டெல்லியில் ரூ.96.72, மும்பையில் ரூ.111.35 என குறைக்கப்பட்டது.
அதன்பிறகு இன்று வரை பெட்ரோல் டீசல் விலையில் எண்ணெய் நிறுவனங்கள் மாற்றம் செய்யவில்லை இதுபோல், கடந்த 2022 மே 22ம் தேதி சென்னையில் டீசல் ரூ.94.24 ஆக குறைக்கப்பட்டது. டெல்லியில் ரூ.89.62, கொல்கத்தாவில் ரூ.92.76 என இருந்தது. இதன்பிறகு நேற்றுடன் 587வது நாளாக பெட்ரோல் டீசல் விலையில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை. இந்த நிலையில், மக்களவை தேர்தலலுக்கு சில மாதங்களே உள்ள நிலையில் பெட்ரோல், டீசல் விலையை குறைக்க ஒன்றிய அரசு திட்டமிட்டு வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.இதுகுறித்து ஒன்றிய அரசு வட்டாரங்கள் கூறியதாவது: புத்தாண்டுப் பரிசாக பெட்ரோல் மற்றும் டீசல் விலையை குறைப்பு அறிவிப்பை வெளியிட ஒன்றிய அரசு திட்டமிட்டுள்ளது. இது தொடர்பாக பெட்ரோலிய அமைச்சகமும், நிதியமைச்சகமும் சமீபத்தில் ஆலோசனைக் கூட்டங்கள் நடத்தின. இதில் எவ்வளவு விலை குறைக்கலாம் என்பது குறித்த பரிந்துரையை பிரதமர் அலுவலகத்துக்கு அனுப்பியுள்ளது.