
புதுடெல்லி, செப்டம்பர். 7 –
சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை பேரலுக்கு 90 டாலர், அதாவது இந்திய ரூபாயின் மதிப்பில் ரூ.7,470 ஐ நெருங்குகிறது. இதனால் பெட்ரோல், டீசல் விலை அதிகரிக்கும் என தெரிகிறது. இந்தியா அதன் ஒட்டுமொத்த எண்ணெய் தேவையில் 85 சதவீதத்தை வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்கிறது. தினமும் ரஷியாவில் இருந்து 3 லட்சம் பேரல்கள், சவூதி அரேபிய நாடுகளில் இருந்து 10 லட்சம் பேரல்கள் இறக்குமதி செய்யப்படுகின்றன. டிசம்பர் இறுதி வரை உலக சந்தையில் ஒரு நாளைக்கு ஒரு மில்லியன் பேரல்கள் விநியோகத்தை குறைக்க சவுதி அரேபியா முடிவு செய்துள்ளது. இதனால் கடந்த வாரத்தில் கச்சா எண்ணெய் விலை 6.5 சதவீதம் உயர்ந்துள்ளது.
இதை தொடர்ந்து இந்த ஆண்டு முதல் முறையாக ஒரு பேரல் உயர்ந்து பேரலுக்கு 89.67 டாலராக அதிகரிக்கப்பட்டது. இந்தியாவை பொறுத்தவரை பெட்ரோல், டீசல் விலை தொடர்ந்து 17 மாதங்களாக மாற்றமின்றி ஒரே விலையில் நீடிக்கிறது. சில்லரை விற்பனையாளர்கள், சர்வதேச எரிபொருள் விலையின் 15 நாள் சுழற்சி அடிப்படையில் தினசரி எரிபொருள் விலையை மாற்றியமைக்க வேண்டும். ஆனால் கடந்த 2022-ம் ஆண்டு ஏப்ரல் 6-ந்தேதி முதல் விலை மாற்றி அமைக்கப்படவில்லை. தற்போதுள்ள சூழலால் எண்ணெய் நிறுவனங்கள், 15 நாட்கள் சராசரி சந்தை நிலவரத்தை பொறுத்து தினமும் விலையை மாற்றி அமைக்க வேண்டியது என்பது தவிர்க்க இயலாததாக ஆகி உள்ளது. சந்தை அடிப்படையிலான விலை நிர்ணயம் காரணமாக பெட்ரோல் மற்றும் டீசல் விலைகள் குறையும் என்ற நம்பிக்கை மீண்டும் ஏற்பட்டது.
இதுபற்றி பெட்ரோல், டீசல் வினியோகஸ்தர்கள் கூறுகையில், கடந்த ஆண்டு மே மாதம் மத்திய அரசு பொதுமக்களுக்கு விலை ஏற்ற, இறக்கங்களால், பாதிப்பு ஏற்படாமல் இருக்க கலால் வரியை குறைத்தது. கச்சா எண்ணெய் விலை கடும் உயர்வை சந்தித்த போதும் பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள் பெட்ரோல், டீசல் விலையை உயர்த்தவில்லை. இதனால் அந்த நிறுவனங்கள் நஷ்டத்தை சந்தித்தன. அதை ஈடுகட்ட உலக அளவில் கச்சா எண்ணெய் விலை சரிவை கண்டபோது விலையை குறைக்காமல் இருந்தன. தற்போது மீண்டும் கச்சா எண்ணெய் விலை உயர்ந்துள்ளதால் இம்முறையும் விலையை குறைக்க வாய்ப்பு இல்லை என்றனர். சென்னையில் இன்று 474-வது நாளாக பெட்ரோல் மற்றும் டீசல் விலையில் மாற்றம் இல்லை. அதன்படி, ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.102.63-க்கும், டீசல் ரூ.94.24-க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.