பெட்ரோல் டீசல் விலை ரூ.2 குறைப்பு

புதுடெல்லி, மார்ச்.14 –
பாராளுமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில் பெட்ரோல் டீசல் விலை லிட்டருக்கு இரண்டு ரூபாய் அதிரடியாக குறைக்கப்பட்டுள்ளது.
இன்று நள்ளிரவு முதல் இந்த விலை குறைப்பு அமலுக்கு வருகிறது. இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை மத்திய அரசு இன்று இரவு வெளியிட்டது. சமீபத்தில் சமையல் எரிவாயு சிலிண்டர் விலை 100 ரூபாய் குறைக்கப்பட்டது. இந்த நிலையில் பெட்ரோல் டீசல் விலை இப்போது குறைக்கப்பட்டுள்ளது.
பெட்ரோலியத்துறை அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி, கடந்த வாரம், பெட்ரோல் மற்றும் டீசல் சில்லறை விற்பனை விலைகள் குறைந்துள்ளதால், பொதுத்துறை எண்ணெய் சந்தைப்படுத்தும் நிறுவனங்களை குறைப்பது குறித்து பரிசீலிக்க வேண்டும் என்று கூறியிருந்தார் இந்த நிலையில் பெட்ரோலியத்துறை அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி தனது ட்விட்டர் பதிவில், “பெட்ரோல், டீசல் விலையை ரூ.2 குறைத்ததன் மூலம், கோடிக்கணக்கான இந்தியர்களின் குடும்பங்களின் நலனும் வசதியும் எப்போதும் தனது இலக்கு என்பதை பிரதமர் நரேந்திர மோடி மீண்டும் நிரூபித்துள்ளார் என்று கூறியுள்ளார். கச்சா எண்ணெய் வாங்குவதில் மிகப்பெரிய நெருக்கடி இருந்த போதிலும் “கடந்த இரண்டரை ஆண்டுகளில் இந்தியாவில் பெட்ரோல் விலை 4.65 சதவீதம் குறைந்துள்ளது” என்றார்.