பெட்ரோல் பங்கிற்கு சீல்

சென்னை: செப்.30- கனமழை, பலத்த காற்று வீசியதால் சென்னை சைதாப்பேட்டையில் உள்ள ஒரு பெட்ரோல் பங்க்கின் மேற்கூரை இடிந்து விழுந்தது. இந்த விபத்தில் பெட்ரோல் பங்க் ஊழியர் ஒருவர் உயிரிழந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.
சென்னையின் பல்வேறு பகுதிகளில் வெள்ளிக்கிழமை மாலை 6 மணி முதல் பலத்த காற்றுடன் கூடிய கனமழை பெய்தது. இந்நிலையில், சைதாப்பேட்டை ஜோன்ஸ் ரோடு அருகே உள்ள பெட்ரோல் பங்க்கின் மேற்கூரை சரிந்து விழுந்து விபத்துக்குள்ளானது. இதில், மழைக்காக பெட்ரோல் பங்கில் ஒதுங்கியிருந்த சிலரும் காயமடைந்தனர்.
இதையடுத்து சம்பவ இடத்துக்கு விரைந்த தீயணைப்புத் துறையினர் உள்ளே சிக்கியிருந்தவர்களை மீட்கும் பணியில் ஈடுப்பட்டனர். 108 ஆம்புலன்ஸ் வரவழைக்கப்பட்டு மீட்பு பணிகள் நடைபெற்றன. இந்த விபத்தில் படுகாயமடைந்த பெட்ரோல் பங்க் ஊழியர் கந்தசாமி என்பவர் உயிரிழந்தததாக தகவல் வெளியாகியுள்ளது.
மேலும், காயமடைந்த 6 பேர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். தொடர்ந்து விபத்து ஏற்பட்ட பகுதியை சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் நேரில் ஆய்வு செய்தார்.
இதையடுத்து செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர், “பெட்ரோல் பங்கின் கூரை சரிந்து 7 பேர் படுகாயமடைந்துள்ளனர். இதில் 4 பேர் ராயப்பேட்டை அரசு மருத்துவமனையிலும், 3 பேர் கலைஞர் நூற்றாண்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். இதில் இளைஞர் ஒருவர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்துள்ளார். இந்தியன் ஆயில் கார்பரேஷ் சிஇஓவிடம் தொடர்பு கொண்டு பேசியிருக்கின்றோம். நெடுஞ்சாலைத்துறையோ, மாநகராட்சியோ எலக்ட்ரிக் கட்டர் கொண்டு இதனை துண்டித்தால் அதிலிருந்து பறக்கும் நெருப்பு துகள்கள் பெட்ரோல் பங்கில் பட்டால் பெரிய விபத்து ஏற்படும். இதனால் இதனை தவிர்த்திருக்கிறோம். தீயணைப்பு துறையும், காவல்துறையும் யாரும் சிக்கிக்கொள்ளவில்லை என தெரிவித்திருக்கிறார்கள். சிகிச்சையில் இருப்பவர்கள் நலமுடன் இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். ஒருவரின் இறப்பு வருதத்தை ஏற்படுத்தியுள்ளது. 16 ஆண்டுகளுக்கு மேல் அமைக்கப்பட்ட மேற்கூரை. தொழில்நிறுவனங்களும், வீடுகளும் தங்களின் கட்டமைப்பை உறுதி செய்துகொள்வது நல்லது” என்றார்.