பெட்ரோல் பங்க்’ ஒதுக்கீடு: டில்லி ஐகோர்ட் கேள்வி


புதுடில்லி, ஏப். 16- ஊனமுற்றோர் உரிமை சட்டத்தின் கீழ், பெட்ரோல் பங்க்குகள் ஒதுக்கப் படுகிறதா’ என, டில்லி உயர் நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது. ‘பெட்ரோல் பங்க்குகள் ஒதுக்கீட்டில், உடல் ஊனமுற்றோருக்கான ஒதுக்கீடு முறையாக கடைப்பிடிக்கப்படுவதில்லை’ என, டில்லி உயர் நீதிமன்றத்தில், 75 சதவீதம் பார்வையிழந்த பெண் ஒருவர் வழக்கு தொடர்ந்துள்ளார்.
மனுவில் அவர் கூறியுள்ளதாவது:எச்.பி.சி.எல்., எனப்படும், ஹிந்துஸ்தான் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் நிறுவனம்,பெட்ரோல் பங்க்குகள் ஒதுக்கீடு தொடர்பாக, 2018ல் விளம்பரம் கொடுத்தது.அதற்காக விண்ணப்பித்தும், நீண்ட காலம் பதில் அளிக்கவில்லை.இதற்கிடையே, 1995ல் அமல்படுத்தப்பட்ட சட்டத்தின் கீழ் ஒதுக்கீடுகள் செய்து முடித்துள்ளதாக
கூறியுள்ளனர். ஆனால், அந்த சட்டம் ரத்து செய்யப்பட்டு, 2016ல், புதிய சட்டம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.இது தொடர்பான புகாரை விசாரித்த, இந்த சட்டத்தின்கீழ் அமைக்கப்பட்டுள்ள தீர்ப்பாயத்தின் தலைமை கமிஷனரும், அந்த நிறுவனத்தின் விளம்பரம் சரியானது என கூறியுள்ளார்.
ரத்து செய்யப்பட்ட சட்டத்துக்கு பதிலாக, புதிய சட்டத்தின் கீழ் பரிசீலனை செய்ய உத்தரவிட வேண்டும்.
இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது. இதையடுத்து, புதிய சட்டத்தின் கீழ், பெட்ரோல் பங்க்குகள் ஒதுக்கப்படுகிறதா என்பது குறித்து பதிலளிக்கும்படி, மத்திய பெட்ரோலியம் மற்றும் சமூக நீதி அமைச்சகங்களுக்கும், எச்.பி.சி.எல்., நிறுவனத்துக்கும், நீதிமன்றம் உத்தரவிட்டது. உடல் னமுற்றோருக்கு வேலைவாய்ப்பை ஊக்குவிக்கும் தேசிய மையம் என்ற, அரசு சாரா அமைப்பின் செயல் இயக்குனர் அர்மான் அலி கூறியதாவது-
ஊனமுற்றோர் நலனுக்காக பல சட்டங்கள் உள்ளன. ஆனால், பெரும்பாலானவை கடைப்பிடிக்கப்படுவதில்லை.எங்களுக்கு வரும் புகார்களில், பெரும்பாலானவை, வேலை மறுக்கப்படுவது, பணியிடத்தில் பாகுபாடு, கல்வி நிறுவனங்களில், ‘சீட்’ வழங்க மறுப்பது குறித்தே உள்ளன.தங்களுக்கு என்னென்ன சலுகைகள் உள்ளன; என்னென்ன உரிமைகள் உள்ளன என்பது ஊனமுற்றோருக்கு தெரிவதில்லை. அது தொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறோம் இவ்வாறு அவர் கூறினார்.