பெட்ஷீட் வியாபாரி மீது பெட்ரோல் ஊற்றி தீ வைத்த வழக்கில் இளைஞர் கைது

கிருஷ்ணகிரி, அக்.18-
கிருஷ்ணகிரி நகரில் உள்ள டான்சி அருகே பெங்களூர் சாலையோரம் பெட்ஷீட் வியாபாரம் செய்து வருபவர் காதர் பாஷா. இவர் கடந்த 11-ம் தேதி பெட்ஷீட் வியாபாரம் செய்து கொண்டிருந்தபோது, அங்கு வந்த இருவர் பெட்ஷீட் விலை கேட்டு பேரம் பேசியுள்ளனர். அப்போது பேரம் படியாததால் அவர்களுக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதைத் தொடர்ந்து அங்கிருந்து சென்ற இருவரும் சிறிது நேரத்தில் திரும்பி வந்து, பாட்டிலில் மறைத்து வைத்திருந்த பெட்ரோலை காதர்பாஷா மீது ஊற்றி தீ பற்ற வைத்துவிட்டு தப்பி விட்டனர். பலத்த தீ காயமடைந்த காதர்பாஷா தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இது தொடர்பாக கொலை முயற்சி வழக்கு பதிவு செய்த கிருஷ்ணகிரி நகர போலீசார், ராயக்கோட்டை அருகே உள்ள கொப்பகரை கிராமத்தைச் சேர்ந்த ரவிச்சந்திரன் (28) என்பவரை கைது செய்தனர். மேலும் தலைமறைவாக உள்ள அவரது சகோதரர் சாரதி (30) என்பவரை தேடி வருகின்றனர்.