பெண்களுக்கு ரூ.30,000 சம்பளத்தில் நிரந்தர வேலை! தேஜஸ்வி யாதவ் அறிவிப்பு

பாட்னா: அக், 23-
பீகார் சட்டமன்ற தேர்தல் நெருங்கும் நிலையில், நாங்கள் ஆட்சி அதிகாரத்திற்கு வந்தால் பெண்களுக்கு ரூ.30,000 மாத சம்பளத்தில் வேலை கொடுப்போம் என்றும், அந்த வேலை நிரந்தர வேலையாக இருக்கும் எனவும் ராஷ்டிரிய ஜனதா தளம் கட்சி அறிவித்திருக்கிறது. ஏற்கெனவே அரசு வேலை குறித்து தேஜஸ்வி யாதவ் வெளியிட்டிருந்த அறிவிப்பு மிகுந்த கவனம் பெற்றிருந்த நிலையில், தற்போது இந்த அறிவிப்பும் கவனம் பெற்றிருக்கிறது. பாட்னாவில் செய்தியாளர் கூட்டத்தில் பேசிய ராஷ்டிரிய ஜனதா தளம் கட்சியின் தலைவர் தேஜஸ்வி யாதவ், தேசிய ஜனநாயக கூட்டணி அரசின் ஜீவிகா சி.எம். திட்டத்தின் செயல்பாட்டை கடுமையாக விமர்சித்தார். சுயஉதவி குழுக்களுடன் தொடர்புடைய பெண்களுக்கு அரசு வேலைகளையும், மாத சம்பளமாக ₹30,000 வழங்கப்படும் என்றும் உறுதியளித்தார். அவர் பேசியதாவது, “இந்த அரசின் கீழ் ஜீவிகா தீதி பெண்களுக்கு அநீதி இழைக்கப்பட்டதை நீங்கள் அனைவரும் அறிவீர்கள். அனைத்து ஜீவிகா சி.எம். தீதி பெண் ஊழியர்களையும் நாங்கள் நிரந்தர பணியாளர்களாக மாற்றுவோம். அவர்களுக்கு அரசு ஊழியர்கள் என்ற அந்தஸ்து வழங்கப்படும். அவர்களின் சம்பளமும் மாதம் ₹30,000 ஆக உயர்த்தப்படும். இது ஒரு சாதாரண அறிவிப்பு அல்ல. ஜீவிகா தீதி பெண்களின் நீண்டகால கோரிக்கையை நாங்கள் நிறைவேற்ற இருக்கிறோம்” என்று கூறியுள்ளார். மேலும், இந்த பெண் ஊழியர்களுக்கு தற்போதுள்ள கடன்களுக்கான வட்டி தள்ளுபடி செய்யப்படும் என்றும், அடுத்த இரண்டு ஆண்டுகளுக்கு வட்டியில்லா கடன் வழங்கப்படும் என்றும் அவர் உறுதியளித்தார். அதேபோல பெண் ஊழியர்களுக்கு மாதம் ₹2,000 கூடுதல் அலவன்ஸும், ₹5 லட்சம் காப்பீட்டுத் தொகையும் வழங்கப்படும் என்று தேஜஸ்வி யாதவ் அறிவித்தார்.