பெண்ணை கொல்ல முயன்ற சம்பவத்தில் கணவருக்கு தொடர்பு?

திருவனந்தபுரம்: ஆகஸ்ட் 7
கேரள மாநிலம் ஆலப்புழா மாவட்டத்தில் உள்ள காயங்குளம் புல்லு குளங்கரை பகுதியை சேர்ந்தவர் சினேகா (வயது 25). கர்ப்பமாக இருந்த இவருக்கு திருவல்லா அருகே பருமலையில் உள்ள தனியார் மருத்துவமனையில் குழந்தை பிறந்தது.
இந்த நிலையில் நர்சு வேடத்தில் வந்த பெண், சினேகாவிற்கு ஊசி போட முயன்றார். ஆனால் அவர் வைத்திருந்த சிரிஞ்சில் மருந்து எதுவும் இல்லாமல் காலியாக இருந்தது. இதுகுறித்து சினேகாவின் தாயார் கேட்டபோது அந்த பெண், சினேகாவின் நரம்பில் வலுக்கட்டாயமாக ஊசியை குத்த முயன்றார்.
இதனை தொடர்ந்து அந்த பெண்ணை ஆஸ்பத்திரி ஊழியர்கள் மடக்கி பிடித்தனர். போலீசார் அவரை கைது செய்தனர். தொடர்ந்து நடைபெற்ற விசாரணையில் அவர், அதே மருத்துவமனையில் மருந்தாளுனராக பணிபுரியும் அனுஷா (25) என்பது உறுதி செய்யப்பட்டது. தொடர்ந்து போலீசார் நடத்திய விசாரணையில் சினேகாவின் கணவர் அருண், அனுஷாவின் நண்பர் என்பது தெரியவந்தது. அவரை காதலித்ததாகவும் திருமணம் கை கூடாததால் சினேகாவை கொலை செய்ய முயன்றதாகவும் அனுஷா போலீசாரிடம் தெரிவித்தார்.