
பெங்களூர் : நவம்பர். 6 – நகரில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய சுரங்கம் மற்றும் நில விஞ்ஞான துறை துணை இயக்குனர் மற்றும் மூத்த நில விஞ்ஞானியான ப்ரதிமா கொலை விவகாரம் தொடர்பாக முக்கிய குற்றவாளியை கைது செய்வதில் நகர போலீசார் வெற்றியடைந்துள்ளனர். வேலையிலிருந்து நீக்கிய பகையை வைத்து நில விஞ்ஞானி ப்ரதிமாவை (45) அவருடைய பழைய கார் ஓட்டுனன் கிரண் என்பவன் கொலை செய்திருப்பது விசாரணையில் தெரிய வந்துள்ளது. போலீசார் இவனை கைது செய்து மேலும் விசாரணைக்கு உட்படுத்தியுள்ளனர். நில விஞ்ஞானி ப்ரதிமா கொலை தொடர்பாக சந்தேகத்தின் பேரில் மூன்று பேரை நேற்று போலீசார் தங்கள் வசம் எடுத்து விசாரணை மேற்கொண்டனர். பின்னர் இவர்களில் ஒருவன் கொலையாளி என்பதை அறிந்த போலீசார் அவனிடம் தீவிர விசாரணை மேற்கொண்டனர். இந்த விசாரணையின்போது பல உண்மைகள் தெரியவந்துள்ளது. அதன்படி குற்றவாளி கிரண் சில விஷங்கள் குறித்து கருத்து பேதங்கள் தெரிவித்ததால் அவனை கடந்த ஒரு வாரத்திற்கு முன்னர் ப்ரதிமா பணியிலிருந்து நீக்கியுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த கிரண் ப்ரதிமாவை கொலை செய்துவிட்டு சாமராஜ்நகருக்கு தப்பி சென்றுள்ளான். குற்றவாளி கிரனை அவனுடைய மொபைல் போன் டவரை வைத்து கண்டுபிடித்த சுப்ரமண்யபுரா போலிஸார் அவனை கைது செய்து நகருக்கு கொண்டுவந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கடந்த ஐந்து வருடங்களாக கிரண் குத்தகை அடிப்படையில் இந்த துறையில் கார் ஓட்டுநராக பணியாற்றிவந்திருப்பதுடன் இவனுடைய தந்தை சுரேஷ் என்பவரும் இதே துறையில் ஓட்டுநராக பணியாற்றியுள்ளார். தன்னை வேலையிலிருந்து நீக்கிய குற்றத்துக்காக ப்ரதிமாவை கொலை செய்ததாக கிரண் விசாரணையின்போது தெரிவித்துள்ளான். இந்த சம்பவம் குறித்து சுப்பிரமணியபுரா போலீஸ் நிலையத்தில் கூடுதல் விசாரணை நடந்து வருகிறது. முதன்மை விசாரணைக்கு பின்னர் குற்றவாளியை நீதிமன்றத்தில் ஆஜர் படுத்த போலீசார் தயார் படுத்தி வருகின்றனர். ப்ரதிமா கொலைக்கு குடும்ப கலகம் காரணம் என்றும் தவிர சட்டவிரோத கல் குவாரி தொழிலை தடுத்து நிறுத்தியது காரணம் என்றும் பல கோணங்களில் யோசிக்கப்பட்டுவந்த நிலையில் தன்னுடைய கார் ஓட்டுனரை பணியிலிருந்து நீக்கியதே முக்கிய காரணம் என தெப்போது தெரியவந்துள்ளது. ப்ரதிமா தன்னுடைய துறையில் நல்ல நேர்மையான மற்றும் உண்மையான அதிகாரி என பிரசித்தி பெற்றிருந்தார். தொட்டகல்லசந்திரா அருகில் குவெம்பு நகரில் இரண்டு அடுக்கு மாடி வீட்டில் இவர் தனியாக வசித்து வந்துள்ளார். இவரை நவம்பர் 4 அன்று இரவு 8.30 மணியளவில் கிரண் கொலை செய்துள்ளான் . ப்ரதிமாவிற்கு அன்று இரவு அவருடைய சகோதரன் போன் செய்த போது இவர் பதிலளிக்காததால் சந்தேகமடைந்து நேற்று காலை வீட்டுக்கு வந்து பார்த்தபோது இவர் கொலையுண்டிருப்பது தெரிய வந்துள்ளது. வீட்டில் எந்த பொருளும் திருடு போகவில்லை. கடந்த எட்டு வருடங்களாக ப்ரதிமா இந்த இடத்தில் வசித்து வந்துள்ளார். இவருடைய கணவன் சத்யநாராயணா மற்றும் மகன் தீர்த்தஹள்ளியில் உள்ளனர். நவம்பர் 3 அன்று இரவு 8 மணியளவில் அலுவலக பணியை முடித்துக்கொண்டு கார் ஓட்டுநர் ப்ரதிமாவை வீட்டில் கொண்டு வந்து விட்டு சென்றுள்ளான். ப்ரதிமா கொலை விவகாரம் குறித்து துப்பு துலக்க போலீசார் ஆறு குழுக்களை அமைத்திருந்தனர். இதில் நில சுரங்க கோஷ்டிகள் , ஆகிய சந்தேகங்கள் இருந்தன. ஹனஸமாரனஹள்ளி மற்றும் சொன்னபனஹள்ளி ஆகிய இடங்களில் நில ஆய்வுகள் நடத்திய ப்ரதிமா 4 ஏக்கர் ஐந்து குண்டே நிலத்தில் சட்டவிரோத குவாரி தொழில் நடத்தி அரசுக்கு 28 லட்ச ரூபாய்கள் நஷ்டம் ஏற்படுத்தியிருப்பதை கண்டுபிடித்து அறிக்கை அளித்திருந்தார். இந்த சட்ட விரோத கல் குவாரி தொழில் தொடர்பாக ஒரு எம் எல் ஏ உட்பட நான்கு பேருக்கு எதிராக முதல் தகவல் அறிக்கையும் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. தவிர சமீப நாட்களில் பல்வேறு அக்கிரம குவாரி தொழில்கள் குறித்தும் ப்ரதிமா நடவடிக்கைகள் மேற்கொண்டு வந்துள்ளார். . எனவே போலீசார் முதலில் இந்த கோணங்களில் விசாரணைகளை முடக்கிவிட்டிருந்தனர்.