பெண் சிசுக்கள் கருக்கலைப்பு- தலைமறைவு குற்றவாளிகளுக்கு வலைவீச்சு

பெங்களூரு, நவ. 27: கர்ப்பத்தில் இருப்பது என்ன குழந்தை என்று அறிந்து கொண்டு, பெண் சிசுவை கருக்கலைப்பு செய்த வழக்கு விசாரணையை தீவிரப்படுத்தியுள்ள பையப்பனஹள்ளி போலீசார், தலைமறைவான குற்றவாளிகளை கைது செய்யும் நடவடிக்கையை தொடர்ந்து மேற்கொண்டு வருகின்றனர்.
இந்த வழக்கில் கைதானவர்களின் எண்ணிக்கை 9 ஆக உயர்ந்துள்ளது.கைது செய்யப்பட்டவர்கள் விசாரணையில் அளித்த தகவலின் அடிப்படையில் தலைமறைவாக உள்ள சென்னை, மைசூரு, மாண்டியாவை சேர்ந்த குற்றவாளிகளை கைது செய்யும் பணியில் போலீசார் ஈடுபட்டுள்ளனர்.
சென்னை டாக்டர் துளசிராம். மைசூரு மாதா மருத்துவமனை மற்றும் அங்குள்ள ராஜ்குமார் சாலையில் உள்ள ஆயுர்வேத பகல்நேர பராமரிப்பு மையத்தில் பணியாற்றிய டாக்டர். சந்தன் பல்லால், அவரது மனைவி மீனா, வரவேற்பாளர் ரிஸ்மா, லேப் டெக்னீசியன் நிசார், ஷ்ரனஞ்சே கவுடா, வீரேஷ், நவீன்குமார், நயன்குமார் ஆகியோர் இதுவரை கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த குற்றவாளிகளுடன் மேலும் பலர் கைகோர்த்திருக்கலாம் என சந்தேகிக்கப்படுவதாக வட்டாரங்கள் தெரிவித்தன.
குற்றம் சாட்டப்பட்டவர்கள் கருவின் பாலினத்தை அறிதல் மற்றும் கருக்கலைப்புக்கான ஒரு முறையான வலையமைப்பை உருவாக்கி உள்ளன‌ர். இது தொடர்பான ஆய்வகம் செய்யப்பட்ட வீட்டையும் பார்வையிட்டு போலீசார் ஆய்வு செய்தனர். அங்கு ஸ்கேனிங் இயந்திரம் கண்டுபிடிக்கப்பட்டது. குற்றம் சாட்டப்பட்டவர்கள் ரூ 24 முதல் 25 கோடி வரை பரிமாற்றம் செய்துள்ளனர். குற்றம் சாட்டப்பட்ட அனைவரின் வங்கி கணக்கு மற்றும் ஆன்லைன் பரிவர்த்தனைகள் ஆராய‌ப்பட்டுள்ளது.மாண்டியா மாவட்டம், மேல்கோட்டை சாலையில் உள்ள ஒரு வீட்டை, கரு பாலின பரிசோதனைக்கான ஆய்வகமாக, இந்த குழுவினர் மாற்றியுள்ளனர். அங்கு, இடைத்தரகர்கள், கர்ப்பிணி பெண்களை, கரு பாலின பரிசோதனைக்கு வரவழைத்தனர். விரேஷ் என்ற போலி மருத்துவர், ஸ்கேனிங் இயந்திரம் மூலம் கருவை கண்டறிந்துள்ளார். கருவில் இருப்பது பெண் குழந்தை என்பதை அறிந்த சம்பந்தப்பட்டவர்கள், மைசூரில் உள்ள பகல்நேர பராமரிப்பு மையத்திற்கு அழைத்துச் சென்று, யாருக்கும் சந்தேகம் வராத வகையில், வியூகம் வகுத்து, இரண்டு மூன்று நாட்கள் கர்ப்பிணிகளை அந்த மையத்தில் வைத்து, கருக்கலைப்பு மாத்திரைகள் அவர்களுக்கு கொடுத்துள்ள‌னர். கருச்சிதைவுக்குப் பிறகு பெண்கள் வீட்டிற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர் என போலீசார் தெரிவித்தனர்.இந்த வழக்கில் மைசூரை சேர்ந்த சந்தன் பல்லால், சென்னையை சேர்ந்த குழந்தைகள் சிறப்பு மருத்துவர் துளசிராம் ஆகியோர் முக்கிய குற்றவாளிகள் என போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.துளசிராமின் தாயார் மகப்பேறு மருத்துவர். மைசூரு உதயகிரியில் ‘லதா மருத்துவமனை’ நடத்தி வந்தார். அதே மருத்துவமனையில் குழந்தைகள் நல மருத்துவராகவும் பணியாற்றி வந்தார். தாயின் மரணத்திற்குப் பிறகு சட்டவிரோத தொழிலில் ஈடுபட்டு வந்த துளசி ராம், பெண் கருவை கலைத்து வருவதாக போலீசார் தெரிவித்தனர்.தனிப்பட்ட காரணங்களுக்காக குடும்பத்துடன் சென்னைக்கு குடிபெயர்ந்த துளசிராம், தனது ‘லதா மருத்துவமனை’யை சந்தன் பல்லாலுக்கு விற்றுவிட்டார். இது சந்தன் மற்றும் மாதா என மறுபெயரிடப்பட்டது. அவர் தனது மனைவி மீனாவை நிர்வாக இயக்குநராக நியமித்தார்.’சந்தன் பல்லால் மாதா மருத்துவமனையின் மேல் ஒரு தனி அறையும் நோயாளி அறையும் கட்டியிருந்தார். துளிசிராம் சென்னையில் இருப்பதாகவும், இடைத்தரகர்கள் வீரேஷ் மற்றும் சிவலிங்க கவுடா மூலம் கருக்கலைப்பு செய்பவர்களை கண்டுபிடித்து சந்தன் பல்லால் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்ததாகவும் போலீசார் தெரிவித்தனர்.