பெண் படுகொலை: குழந்தையுடன் இந்தியா தப்பிய கணவருக்கு போலீஸ் வலை

மெல்போர்ன்: மார்ச்.11 ஆஸ்திரேலியாவில் வசித்துவந்த தெலங்கானா மாநிலம் ஹைதராபாத்தைச் சேர்ந்த 36 வயது இளம் பெண் ஒருவர் மர்மமான முறையில் இறந்து கிடந்தார். அவரது கணவர் குழந்தையுடன் இந்தியா திரும்பிய நிலையில் ஆஸ்திரேலியாவின் விக்டோரியா போலீஸார் அவர் மீது சந்தேக வழக்குப் பதிவு செய்துள்ளனர். மனைவியைக் கொலை செய்துவிட்டு குழந்தையுடன் அவர் தப்பியோடியதாக போலீஸார் சந்தேகிக்கின்றனர்.
ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த சைத்தன்யா மதாகனி. அவர், கணவர் மற்றும் மகனுடன் ஆஸ்திரேலியாவில் வசித்துவந்தார். கடந்த சனிக்கிழமை பக்லீ பகுதியில் உள்ள ஒரு குப்பைத் தொட்டியில் அவர் சடலமாகக் கண்டெடுக்கப்பட்டார். அவரது சடலத்தைப் போலீஸார் கைப்பற்றி வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.
இந்நிலையில், தகவலறிந்த தெலங்கானா மாநிலம் உப்பல் தொகுதி காங்கிரஸ் எம்எல்ஏ பண்டாரி லட்சுமண ரெட்டி உயிரிழந்த பெண்ணின் குடும்பத்தாரை நேரில் சந்தித்து ஆறுதல் கூறியுள்ளார். இது குறித்து பேட்டியளித்த அவர், “சம்பவம் குறித்து எனக்குத் தகவல் கிடைத்ததும் என் தொகுதியில் வசிக்கும் அப்பெண்ணின் பெற்றோரை நேரில் சந்தித்து ஆறுதல் கூறினேன். அப்பெண்ணின் உடலை இங்கே கொண்டுவர ஏற்பாடு செய்யக் கோரி வெளியுறவு அமைச்சகத்துக்கும் கடிதம் எழுதியுள்ளேன். மத்திய அமைச்சர் கிஷன் ரெட்டிக்கும் உரிய தகவல் அனுப்பியுள்ளேன். அப்பெண்ணின் பெற்றோர் தங்கள் மருமகன் தானே மனைவியைக் கொன்றேன் என ஒப்புக் கொண்டதாகக் கூறினர். அவர்களிடம் குழந்தையை ஒப்படைத்துவிட்டு அந்த நபர் சென்றிருக்கிறார் என்பதையும் அவர்கள் தெரிவித்தனர்” என்றார்.
முன்னதாக கடந்த 9 ஆம் தேதி விக்டோரியா போலீஸார் வெளியிட்ட அறிக்கையில், “வின்சல்ஸீ அருகே பக்லீ பகுதியில் மவுன்ட் பொல்லக் சாலையில் நாங்கள் ஒரு சடலத்தை மீட்டோம். அதேபோல் பாயின்ட் குக் பகுதியில் மிர்கா வே முகவரியில் ஒரு குற்ற நிகழ்விடத்தைக் கண்டறிந்தோம். இந்த இரண்டுக்கும் தொடர்பு இருக்கும் என சந்தேகிக்கிறோம். இதை மர்ம மரணம் எனக் கருதி விசாரித்து வருகிறோம்” எனத் தெரிவித்திருந்தது.