பெரிஃபெரல் ரிங் ரோட்டிற்கு பெங்களூரு வணிக வழித்தடம் என பெயர் மாற்றம்

பெங்களூரு, ஜன. 18: பெரிஃபெரல் ரிங் ரோட்டிற்கு (வெளி வட்டச்சாலை) பெங்களூரு வணிக வழித்தடமாக மறு பெயர் சூட்ட அரசு திட்டமிட்டுள்ளது.
நீண்ட காலமாக நிலுவையில் உள்ள பெரிஃபெரல் ரிங் ரோட்டை (பிஆர்ஆர்) 71 கிமீ தூரத்திற்கு பெங்களூரு வணிக வழித்தடம் என பெயர் மாற்றம் செய்ய மாநில அரசு திட்டமிட்டுள்ளது. கடந்த 20 ஆண்டுகளாக கிடப்பில் உள்ள இந்த திட்டத்தை செயல்படுத்த இந்த வார இறுதிக்குள் உலகளாவிய டெண்டர் வெளியிடப்படும் என்று துணை முதல்வர் டி.கே.சிவகுமார் புதன்கிழமை தெரிவித்தார். நிலத்தை வழங்கியவ‌ர்களுக்கு உரிய இழப்பீடு வழங்கப்படும்.
நிலத்தை மறுமதிப்பீடு செய்ய அரசுக்கு நிறைய அழுத்தம் உள்ளது. ஆனால் நாங்கள் அதை செய்ய மாட்டோம். போக்குவரத்தை எளிதாக்க இந்த திட்டம் தேவை. சாலையின் இருபுறமும் நிறைய வணிக நடவடிக்கைகள் இருக்கும் என்பதால், நாங்கள் திட்டத்தின் பெயரை மாற்றுகிறோம். பெங்களூரின் போக்குவரத்து நெரிசலைக் குறைக்க இது அவசியமான திட்டமாகும் என்றார்.
நிலம் இழந்தவர்களுக்கு இழப்பீடு வழங்குவது சர்ச்சைக்குரிய விஷயமாக உள்ளது. 2006-ம் ஆண்டு 1,818 ஏக்கர் நிலம் அறிவிக்கப்பட்டபோது நிலம் இழந்தவர்களுக்கு நிலுவைத் தொகை வழங்கப்படும் என பெங்களூரு வளர்ச்சி ஆணையம் கூறியுள்ள நிலையில், 2014-ம் ஆண்டு நிலம் கையகப்படுத்தும் சட்டத்தின்படி இழப்பீடு வழங்க வேண்டும் என்று விவசாயிகள் வலியுறுத்தியுள்ளனர்.
விவசாயிகளுக்கு உரிய இழப்பீடு வழங்கப்படும் எனக் கூறி, டி.கே.சிவகுமார் நிலுவைத்தொகையை செலுத்த முடிவு செய்துள்ளார். புதிய விதிகள் மற்றும் உச்ச நீதிமன்ற உத்தரவுகளை கருத்தில் கொண்டு நிலம் கையகப்படுத்தப்படும் என்றார். இந்த திட்டம் குறித்து ஓய்வுபெற்ற உயர்நீதிமன்ற நீதிபதி தலைமையில் இன்று (வியாழக்கிழமை) கூட்டம் நடைபெற உள்ளது. ஆனால் இது தொடர்பான‌ எந்த விவரங்களையும் வெளியிடப்படவில்லை.
இந்த வார இறுதிக்குள் உலகளாவிய டெண்டரை வெளியிடுவோம். யார் வேண்டுமானாலும் பங்கேற்கலாம். எஸ்டபள்யுஎஸ்எஸ் (SWISS) கீழ் பணியை மேற்கொள்ள நிறைய அழுத்தம் இருந்தது. அத‌னால் வழக்கமான டெண்டர் முறையை தேர்வு செய்ய அரசு முடிவு செய்துள்ளது என்று டி.கே.சிவகுமார் தெரிவித்தார்.