பெற்ற மகளையே கொன்ற பெற்றோர்

மைசூர் : ஜூன். 8 – வேறு ஜாதி இளைஞனை காதலித்த சிறுமி மகளை பெற்ற தாய் தந்தையரே இரண்டு பேரும் சேர்ந்து கொலை செய்துள்ள சம்பவம் பெரியப்பட்டணாவில் நடந்துள்ளது. இரண்டாம் ஆண்டு பி யு சி படித்துவந்த ஷாலினி (17) கொலையுண்ட சிறுமியாவார். மகளை கொலை செய்த தந்தை சுரேஷ் மற்றும் தாய் பேபி ஆகியோரை போலீசார் கைது செய்துள்ளனர். கொலையுண்ட ஷாலினி பக்கத்து கிராமத்தின் மெல்லஹள்ளி என்ற கிராமத்தில் வசித்து வந்த இளைஞன் மஞ்சு என்பவனை காதலித்து வந்துள்ளாள். இவர்கள் இரண்டு பேரின் காதலுக்கு ஷாலினியின் பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்தனர். . இதனால் காதலர்கள் திருமணம் செய்து கொள்ள முடிவு செய்தனர். காதலனுக்காக ஷாலினி வீட்டை விட்டு வந்துள்ளாள் . இந்த விஷயம் போலீஸ் வரையிலும் சென்றுள்ளது. போலிஸாரின் முன்னிலையில் ஷாலினி வீட்டுக்கு போக மாட்டேன் என அடம் பிடித்துள்ளாள். இதனால் ஷாலினி சிறுவர் காப்பகத்தில் சேர்ந்து கொண்டாள் . சமீபத்தில்தான் மகளை பெற்றோரான சுரேஷ் மற்றும் பேபி வீட்டுக்கு அழைத்து வந்து மகளை கொலை செய்துள்ளனர். ஷாலினியின் இறந்த உடல் கழனியில் கண்டெடுக்கப்பட்டுள்ளது. தங்களை அவமதித்ததற்காக மகளை கொலை செய்ததாக போலீசாரிடம் ஷாலினியின் பெற்றோர் தெரிவித்துள்ளனர்.

பெரியப்பட்டானா போலீசார் இது குறித்து வழக்கு பதிவு செய்து பெற்றோரை கைது செய்துள்ளனர்.