பேரிகை அருகேடாஸ்மாக் கடையில் ரூ.2 லட்சம் மதுபாட்டில்கள் கொள்ளை


ஓசூர், ஏப்.22-
பேரிகை அருகே டாஸ்மாக் கடையில் ரூ.2 லட்சம் மதுபாட்டில்களை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்றனர். அவர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
பேரிகை அருகே டாஸ்மாக் கடையில் ரூ.2 லட்சம் மதுபாட்டில்களை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்றனர். அவர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
இந்த கொள்ளை சம்பவம் பற்றிய விவரம் வருமாறு:-
கிருஷ்ணகிரி மாவட்டம் பேரிகை அருக உள்ள ராமச்சந்திரம் கிராமத்தில் டாஸ்மாக் கடை செயல்பட்டு வருகிறது. இந்த கடையில் தர்மபுரி மாவட்டம் அரூர் அருகே உள்ள தொட்டம்பட்டி கிராமத்தை சேர்ந்த மனோகரன் (வயது 48) என்பவர் மேற்பார்வையாளராக பணிபுரிந்து வருகிறார். கடந்த 19-ந் தேதி இரவு 10 மணிக்கு விற்பனை முடிந்த பிறகு அவர், விற்பனையாளர்கள் டாஸ்மாக் கடையை பூட்டிவிட்டு வீடுகளுக்கு சென்றனர்.
பின்னர், நேற்று முன்தினம் காலை அவர் வந்த போது கடையின் பூட்டு உடைக்கப்பட்டு இருந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த மனோகரன் உள்ளே சென்று பார்த்தபோது கடையில் இருந்த ரூ.2 லட்சம் மதிப்பிலான மதுபாட்டில்கள் கொள்ளையடிக்கப்பட்டு இருந்தது. இதுகுறித்து அவர் பேரிகை போலீசில் புகார் செய்தார்.
அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று பார்வையிட்டு விசாரணை நடத்தினர். தொடர்ந்து கிருஷ்ணகிரியில் இருந்து கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டனர். அவர்கள் கடையில் பதிவாகி இருந்த கைரேகை மற்றும் தடயங்களை பதிவு செய்தனர். மேலும், மோப்ப நாய் வரவழைக்கப்பட்டது. அது சிறிது தூரம் அங்கும், இங்கும் ஓடி விட்டு நின்றுவிட்டது.
இந்த கொள்ளை சம்பவம் குறித்து போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பாஞ்சாலி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார். இதனிடைய மதுபான பாட்டில்களை கொள்ளையடித்து சென்ற மர்ம நபர்களை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. தனிப்படை போலீசார் மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகின்றனர். டாஸ்மாக் கடையில் மதுபாட்டில்கள் கொள்ளை போன சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.