சென்னை: அக்.18- ஆட்டோ மற்றும் டாக்சி ஓட்டுநர்கள் தாக்குதல் நடத்துகின்றனர். எனவே, அவர்களிடமிருந்து எங்களுக்கு பாதுகாப்பு வழங்க வேண்டும்’ என பைக் டாக்சி ஓட்டுநர்கள் காவல் ஆணையரிடம் புகார் அளித்துள்ளனர்.தமிழ்நாடு பைக் டாக்சி சங்கத்தைச் சேர்ந்த சுமார் 50 பேர் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் நேற்று புகார் மனு அளித்தனர். அதில், கூறப்பட்டிருப்பதாவது: எங்களைப் போன்ற பைக் டாக்சி ஓட்டுநர்களை ஒரு சில ஆட்டோ மற்றும் டாக்சிஓட்டுநர் சங்கங்கள் அச்சுறுத்தும் வகையில் தொடர்ந்து நடந்துகொள்கின்றனர்.
மேலும், பைக் டாக்சி ஓட்டுநர்களை தாக்குதல், பணி செய்ய விடாது தடுத்தல், தரக்குறைவாக பேசுதல் என்ற அவர்களின் நடவடிக்கைகள் எங்களின் வாழ்வாதாரத்தை தொடர்ந்து பாதித்து வருகிறது.
இன்று முதல் அதாவது 16.10.2023 முதல் 18.10.2023ம் தேதி வரை ஆட்டோ ஓட்டுநர்சங்கங்கள், உரிமைக்குரல் ஓட்டுநர் சங்கத்தைச் சேர்ந்தவர்கள் பைக் டாக்சி சேவைக்கு எதிரான நடவடிக்கைகளை முடுக்கிவிட்டு எங்களை அச்சுறுத்தும் வகையில் நடந்து கொள்கின்றனர்.
இதனால், எங்களின்பாதுகாப்பு கேள்விக்குறியாகி உள்ளது. எனவே, எங்களது புகாரை உடனடியாக ஆய்வு செய்து பல்லாயிரக்கணக்கான பைக் டாக்சி ஓட்டுநர்களுக்கு உரிய பாதுகாப்பை வழங்க வேண்டும்’ இவ்வாறு புகார் மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து உரிய விசாரணை நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது.