பைக் மீது பஸ் மோதியதில் ஒருவர் சாவு

பெங்களூர் : நவம்பர். 3 – வேகமாக வந்த பி எஸ் டி சி பஸ் ஒன்று முன்னே சென்றுகொண்டிருந்த பைக் மீது மோதியதில் பைக்கில் இருந்த மின் மேற்பார்வையாளர் ஒருவர் அதே இடத்தில் இறந்துள்ள சோக சம்பவம் நடந்துள்ளது. காமாட்சிபாள்யாவின் சுமனஹள்ளி மேம்பாலம் அருகில் நேற்று இரவு இந்த விபத்து நடந்துள்ளது. ஹாசன் மாவட்டத்தின் சன்னராயப்பட்டனாவை சேர்ந்த லக்கரேவில் வசித்துவந்த பிரமோத் குமார் (24) என்பவர் இந்த விபத்தில் உயிரிழந்தவர். இந்த விபத்துக்கு காரணமான பஸ் ஓட்டுநர் ஹாசிம் சாப் (44) என்பவரை கைது செய்துள்ள காமாட்சிபாள்யா போக்குவரத்து போலீசார் அடுத்த கட்ட விசாரணையை துவங்கியுள்ளனர் என டி சி பி குலதீப் குமார் ஜெயின் தெரிவித்துள்ளார். காமாட்சிபாள்யாவின் புற வளைவு சாலையில் இரவு 10.30 மணியளவில் சவுடேஸ்வரி நகரின் ஹெச் பி பெட்ரோல் பங்க் அருகில் உள்ள மந்த்ர பவன் பார்ட்டி ஹால் எதிரில் சுமனஹள்ளி மார்க்கத்திலிருந்து லக்கரே மார்கமாக அதிவேகம் மற்றும் அஜாக்ரதையுடன் ஒட்டிக்கொண்டு வந்த பஸ் இதே மார்கத்தில் சென்றுகொண்டிருந்த பைக் மீது பின்புறமாக மோதியுள்ளது. பைக்குடன் சேர்ந்து கீழே விழுந்த ப்ரமோத் குமார் மீது பஸ்ஸின் இடப்புற சக்கரம் எறியுள்ளது . இதனால் பைக் நொறுங்கியதுடன் அதை ஒட்டி வந்த பிரமோத் குமார் அதே இடத்தில் உயிரிழந்துள்ளார். இந்த விபத்து கண்டு ஆத்திரமடைந்த அருகில் இருந்த பொது மக்கள் விபத்துக்கு காரணமான பஸ் ஓட்டுனரை தாக்க துவங்கியுள்ளனர். சம்பவ இடத்திற்கு தகவல் அறிந்த உடனேயே வந்த காமாட்சிபாள்யா போக்குவரத்து போலீசார் பஸ் ஓட்டுநரை கைது செய்து வழக்கு பதிவு செய்துள்ளனர்.