ஹைதராபாத்: அக்டோபர் . 12 அமராவதி உள்வட்ட சாலை முறைகேடு வழக்கு, அங்கல்லு கலவர வழக்கு ஆகியவற்றில் ஆந்திர முன்னாள் முதல்வர் சந்திரபாபு நாயுடுவுக்கு முன் ஜாமீன் வழங்கப்பட்டுள்ளது. ஃபைபர் நெட் வழக்கில் முன் ஜாமீன் குறித்து இன்று தீர்ப்பு வெளியாக உள்ளது. இதற்கிடையே மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவை சந்தித்துள்ளார் சந்திரபாபு நாயுடுவின் மகன் நாரா லோகேஷ்.
தெலுங்கு தேசம் கட்சியின் தலைவர் சந்திரபாபு நாயுடு கடந்த 2014 முதல் 2019 வரை ஆந்திர மாநில முதல்வராக இந்தார். அவரது பதவிக் காலத்தில் மாநில திறன் மேம்பாட்டு நிதியில் ரூ. 240 கோடி முறைகேடு நடந்ததாக புகார் எழுந்தது. இது தொடர்பாக சந்திரபாபு நாயுடுவை ஆந்திர மாநில சிஐடி போலீசார் கடந்த செப்டம்பர் 9ஆம் தேதி கைது செய்தனர். விசாரணை மற்றும் மருத்துவப் பரிசோதனைக்குப் பிறகு அவரை விஜயவாடா லஞ்சஒழிப்பு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.
சந்திரபாபு நாயுடுவை 15 நாட்கள் நீதிமன்ற காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டார். இதையடுத்து ராஜமகேந்திரவரம் மத்திய சிறையில் சந்திரபாபு நாயுடு அடைக்கப்பட்டார். அவருக்கு 7691 எனும் கைதி எண் வழங்கப்பட்டது. அவருக்கு வீட்டு உணவு, மருந்து, மாத்திரைகள், நாளிதழ்கள் வழங்கப்படுகிறது. ஏசி அறை, டி.வி. உள்ளிட்ட வசதிகள் அளிக்கப்பட்டுள்ளது. சந்திரபாபு நாயுடுவுக்கு நீதிமன்ற காவல் நீட்டிக்கப்பட்டுள்ளது.
ந்நிலையில், சந்திரபாபு நாயுடுவின் கைதை கண்டித்து ஆந்திர மாநிலம் முழுவதும் முழு அடைப்பு போராட்டம் நடைபெற்றது. இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.ச்சந்திரபாபு நாயுடுவுக்கு ஜாமீன் வழங்க வேண்டும் எனவும் பாதுகாப்பு கருதி அதுவரை அவரை வீட்டுக்காவலில் வைக்க வேண்டும் எனவும் அவரது வழக்கறிஞர் சித்தார்தா லூத்ரா சார்பில் லஞ்ச ஒழிப்பு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
இந்த மனுவை விசாரணைக்கு ஏற்ற நீதிமன்றம், வீட்டுக்காவலில் சந்திரபாபு நாயுடுவுக்கு பாதுகாப்பு இருக்காது. சிறையில் தான் அவருக்கு அதிக பாதுகாப்பு உள்ளது என கூறி, வீட்டுக்காவல் மனுவை தள்ளுபடி செய்தது. இதற்கிடையே சந்திரபாபு நாயுடு மீது அமராவதி உள்வட்ட சாலை வழக்கு, ஃபைபர் நெட் வழக்கு, அங்கல்லு பகுதியில் போலீஸ் விதிகளை மீறி பொதுக்கூட்டம் நடத்திய வழக்கு என மேலும் 3 வழக்குகளை ஜெகன்மோகன் அரசு பதிவு செய்தது. அமராவதி உள்வட்ட சாலை மோசடி வழக்கு, ஃபைபர் நெட் ஊழல் வழக்கு மற்றும் அங்கல்லு கலவர வழக்கில் முன்ஜாமீன் கோரி ஆந்திர உயர்நீதிமன்றத்தில் சந்திரபாபு நாயுடு மனுத்தாக்கல் செய்திருந்தார். இதில் அமராவதி உள்வட்ட சாலை வழக்கில் முன்ஜாமீன் கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவை விசாரித்த ஆந்திர உயர்நீதிமன்றம், இந்த வழக்கில் வரும் 16ஆம் தேதி வரை சந்திரபாபு நாயுடுவை கைது செய்யக்கூடாது என இடைக்கால ஜாமீன் வழங்கி உத்தரவிட்டது.
மேலும், அங்கள்ளு கலவர வழக்கிலும், சந்திரபாபு நாயுடுவுக்கு முன் ஜாமீன் அளிக்கப்பட்டது. ஆந்திர முன்னாள் முதல்வர் சந்திரபாபு நாயுடுவுக்கு இரண்டு வழக்குகளில் முன் ஜாமீன் வழங்கப்பட்டுள்ள நிலையில், ஃபைபர் நெட் வழக்கில் முன் ஜாமீன் குறித்து இன்று தீர்ப்பு வெளியாகிறது. இந்த வழக்கிலும் முன் ஜாமீன் கிடைக்கும் பட்சத்தில் அவர் ஏற்கனவே கைது செய்யப்பட்டுள்ள திறன் மேம்பாட்டு ஊழல் வழக்கில் ஜாமீன் பெறும் முயற்சிகள் தீவிரப்படுத்தப்படும் எனத் தெரிகிறது.