பையப்பனஹள்ளி-ஓசூர் இரட்டை ரயில் பாதைப் பணிகள் ஓராண்டில் நிறைவு

பெங்களூரு, அக். 27: தென்மேற்கு ரயில்வேயின் பையப்பனஹள்ளி-ஓசூர் மற்றும் யஷ்வந்த்புரா-சன்னசந்திரா இடையேயான இரட்டை ரயில் பாதை பணிகள், இன்னும் ஓராண்டுக்குள் நிறைவடையும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.
தென்மேற்கு ரயில்வே அனைத்து இடங்களிலும் இரட்டை ரயில் பாதை பணிகளை மேற்கொண்டு வருகிறது. பெங்களூரு நகரின் வழியாக செல்லும் பையப்பனஹள்ளி-ஓசூர் மற்றும் யஷ்வந்த்புரா-சன்னசந்திரா (பையப்பனஹள்ளி வரை மட்டும்) ஆகிய வழித்தடங்களை இரட்டைப் பாதையில் கண்காணிக்கும் பொறுப்பு கர்நாடக ரயில்வே உள்கட்டமைப்பு மேம்பாட்டுக் கழகத்திடம் (K-RAID) ஒப்படைக்கப்பட்டுள்ளது.
சிங்கிள் டிராக் என்பதால், சிக்னல்களுக்காக ரயில் காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டது. எதிரே வரும் ரயில் கடக்கும் வரை நேரம் விரயமானது. இந்த இரண்டு வழித்தடப் பணிகள் முடிவடைந்தால், தென்மேற்கு ரயில்வேயின் அனைத்து முக்கியப் பாதைகளும் இரட்டைப் பாதையாக மாறிவிடும்.யஷ்வந்த்புரா-சன்னசந்திரா 21.7 கி.மீக்கான இரட்டை ரயில் பாதைப்பணிகள் நான்கு கட்டங்களாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது. யஷ்வந்த்புராவில் இருந்து லொட்டேகொல்லஹள்ளி வரை 5.3 கி.மீ வரையும், அங்கிருந்து ஹெப்பாள் வரையிலான‌ 2.8 கி.மீ பணி ஜூன் 2024க்குள் முடிவடையும். ஹெப்பாள் – பானசவாடி 7.6 கி.மீ, மேலும் அங்கிருந்து பையப்பனஹள்ளி ‘ஏ’ கேபினுக்கு 4 கி.மீ, பையப்பனஹள்ளி முதல் சன்னசந்திரா வரை 2 கி.மீ வரையிலான‌ பணிகள் 2024 டிசம்பருக்குள் முடிக்கப்படும் என கே-ரைடு அதிகாரிகள் தெரிவித்தனர்.பையப்பனஹள்ளி – ஓசூர் 48 கி.மீ. கார்மேலாரம் – ஹுஸ்கூர் – ஹெய்லாலி வழித்தடத்தில் 10.3 கி.மீ கட்டுமானப் பணிகள் நிறைவடைந்துள்ளன. பெல்லந்தூர் – கார்மேலாரம் கட்டுமானப் பணிகள் 2024 ஆம் ஆண்டு மார்ச் மாதத்திற்குள் முடிக்கப்படும். பையப்பனஹள்ளி – பெல்லந்தூர், ஹெயிலலிகே – ஆனேக்கல், அங்கிருந்து மாரநாயக்கனஹள்ளி – ஓசூர் வரையிலான பணிகள் 2024 டிசம்பரில் கட்டம் கட்டமாக முடிக்கப்படும். இரட்டனை பாதைப்பணிகள் முடிவடைந்தால், ரயில்கள் காத்திருக்கும் நேரம் குறையும் என விளக்கினர்.