பையப்பனஹள்ளி‍ – கே.ஆர் புரம் மெட்ரோ ரயில் சேவைக்கு தடையில்லை

பெங்களூரு, செப். 26: ஒரு சில நிபந்தனைகளைத் தவிர பையப்பனஹள்ளி‍-கே.ஆர் புரம் இடையேயான மெட்ரோ ரயில் சேவை தொடங்க தடையில்லை என்று பெங்களூரு மெட்ரோ ரயில் கழகம் தெரிவித்துள்ளது.
பெங்களூரு மெட்ரோ ரயில் கழகத்தின் மேலாண் இயக்குநர் அஞ்சும் பர்வேஸ், இரண்டு முன்னேற்றங்களையும் உறுதிப்படுத்தினார். ஆனால் இரண்டு பிரிவுகளும் எப்போது பொதுமக்களுக்கு திறக்கப்படும் என்பதைக் குறிப்பிடவில்லை.
பெங்களூரு மெட்ரோ ரயில் கழகத்தின் மூத்த அதிகாரி ஒருவர், சில வழக்கமான நிபந்தனைகளைத் தவிர, வணிக நடவடிக்கைகளைத் தொடங்குவதற்கு மெட்ரோ ரயில் பாதுகாப்பு ஆணையம் (CMRS) எந்த கட்டுப்பாடுகளையும் விதிக்கவில்லை என்று தெரிவித்தார்.
“பென்னிகனஹள்ளியில் உள்ள இந்திய ரயில்வே பாதைக்கு மேலே வைக்கப்பட்டுள்ள திறந்த வலை கிர்டரில் ரயில்களை இயக்குவது உட்பட குறிப்பிட்ட கட்டுப்பாடுகள் எதுவும் இல்லை”. பையப்பனஹள்ளி‍-கே.ஆர் புரம் பகுதி அக்டோபர் 2ஆம் தேதி (காந்தி ஜெயந்தி) திறக்கப்படலாம் என்று அதிகாரி குறிப்பிட்டார். ஆனால் உறுதியான முடிவு எதுவும் இன்னும் எடுக்கப்படவில்லை என்றார்.இரு பிரிவுகளும் (பையப்பனஹள்ளி‍-கே.ஆர் புரம் மற்றும் கெங்கேரி-செல்லகட்டா) ஒன்றாக திறக்கப்படலாம் என்று கருதுகின்றனர். இந்தக் கருத்து உறுதியானால், வணிகச் செயல்பாடுகள் மேலும் தாமதமாகலாம். எல்லாம் சுமூகமாக நடந்தால், செப்டம்பர் 30 ஆம் தேதி ​​மெட்ரோ ரயில் பாதுகாப்பு ஆணையத்தின் அனுமதி (கெங்கேரி-செல்லகட்டா பாதைக்கு) பெறலாம். ஆனால் செப்டம்பர் 30 சனிக்கிழமை என்பதால், அக்டோபர் 3 வரை காத்திருக்க வேண்டியிருக்கும் என்று அதிகாரி விளக்கினார்.
வணிக நடவடிக்கைகளின் ஆரம்பம் அரசியல் தலைவர்கள் மற்றும் பிற முக்கியஸ்தர்களின் இருப்பு உட்பட பல காரணிகளைப் பொறுத்தது. பெங்களூரு மெட்ரோ ரயில் கழகம் என்பது மத்திய மற்றும் மாநில அரசுகளின் கூட்டு முயற்சியாக இருப்பதால், மத்திய அரசின் ஒப்புதலும் இதற்கு தேவைப்படுகிறது.
வெறும் 2.1-கிமீ நீளம்தான் என்றாலும், பையப்பனஹள்ளி‍-கே.ஆர் புரம் பர்ப்பிள் லைன் முக்கியத்துவம் வாய்ந்தது ஆகும். ஏனெனில் இது ஒயிட்ஃபீல்டின் தொழில்நுட்ப மையத்தை சிபிடி மற்றும் நகரின் மற்ற பகுதிகளுடன் இணைக்க உதவும். 13.7-கிமீ கே.ஆர்.புரம்-ஒயிட்ஃபீல்ட் பாதை செயல்பாட்டில் உள்ளது. ஆனால் மற்ற மெட்ரோ நெட்வொர்க்கில் இருந்து துண்டிக்கப்பட்டுள்ள‌து. இரண்டு பிரிவுகளும் திறக்கப்படுவதால், பர்பிள் லைன் 43 கி.மீ ஆகவும், பெங்களூரு மெட்ரோ நெட்வொர்க் 73 கி.மீட்டருக்கும் விரிவடையும்.