பொசுங்கும் பூங்கா நகர்- 30 ஆண்டுகளுக்குப் பிறகு 38 டிகிரி வெப்பம் பதிவு

பெங்களூரு, ஏப்.7-
பெங்களூரில் 30 ஆண்டுகளுக்குப் பிறகு இன்று அதிகபட்ச வெப்பம் பதிவாகி உள்ளது. பெங்களூரில் இன்று 38 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவாகி உள்ளது
கர்நாடகாவின் ஒவ்வொரு மாவட்டத்திலும் சுட்டெரிக்கும் வெயில் வாட்டி வதைத்து வரும் நிலையில், இந்த முறை யாதகிரி, கலபுர்கி ஆகிய பகுதிகளில் வரலாறு காணாத வெப்பம் பதிவாகியுள்ளது கவலையை ஏற்படுத்தியுள்ளது. கர்நாடக
மாநிலத்தின் பெரும்பாலான மாவட்டங்களில் குறைந்தபட்ச மற்றும் அதிகபட்ச வெப்பநிலை 2 முதல் 3 டிகிரி செல்சியஸ் வரை உயர்ந்துள்ளது. குறிப்பாக இன்று ஞாயிற்றுக்கிழமை, மாநிலத்திலேயே அதிகபட்சமாக யாத்கிரி மாவட்டத்தில் 44.6 டிகிரி வெப்பநிலை பதிவாகியுள்ளது.
கலபுர்கி மாவட்டத்தில் 43.1 டி.எஸ். வெப்பநிலை பதிவாகியுள்ளது. பிதர், பாகல்கோட், கதக், கலபுர்கி, கொப்பல், ராய்ச்சூர், யாத்கிரி, விஜயப்பூர், ஹாவேரி, பெல்லாரி, விஜயநகர, சித்ரதுர்கா, தாவங்கரே, தும்கூர் ஆகிய மாவட்டங்களில் அடுத்த 3 நாட்களுக்கு அனல் காற்று வீசும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
மதியம் 12 மணி முதல் 3 மணி வரை வெயிலில் நடக்க வேண்டாம். நிறைய தண்ணீர் குடிக்கவும். பருத்தி ஆடைகளையே அணிய வேண்டும். வெயிலில் நடக்கும்போது குடை, கண்ணாடி, தொப்பி, காலணிகள், செருப்புகள் அணிய வேண்டும். மது அருந்துவதை தவிர்க்கவும் அதிக தண்ணீர் குடிக்கவும்.குழந்தைகள் மற்றும் செல்லப்பிராணிகளை வாகனங்கள் நிறுத்தும் இடங்களில் விடக்கூடாது என வானிலை ஆய்வு மையம் அறிவுறுத்தியுள்ளது.
மறுபுறம், மாநில தலைநகர் பெங்களூரிலும் அதிக வெப்பம் பதிவாகி வருகிறது. இங்குள்ள கெம்பேகவுடா சர்வதேச விமான நிலையத்தில் இன்று ஞாயிற்றுக்கிழமை 37.8 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவாகியுள்ளது. 30 ஆண்டுகளுக்குப் பிறகு இந்த அளவில் வெப்பநிலை பதிவாகி உள்ளது குறிப்பிடத்தக்கது.
1996 29ம் தேதி 37.3 டிகிரி செல்சியஸ் பதிவானது. மார்ச் மற்றும் ஏப்ரல் மாதங்களில் அதிகபட்ச மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை இயல்பை விட 2 முதல் 3 டிகிரி செல்சியஸ் அதிகமாக இருந்தது. அதிக வெப்பநிலை பதிவாகி வருகிறது. கர்நாடக மாநிலம் முழுவதும் வெயில் சுட்டெரித்து வருவதால் மக்கள் பெரும் அவதிப்பட்டு வருகின்றனர்