
பெங்களூரு, செப். 9: பொது இடங்களில் விநாயகர் சிலை வைத்து வழிபட சம்பந்தப்பட்ட துறைகளிடம் அனுமதி பெறுவது கட்டாயம் என்று பெங்களூரு போலீஸ் கமிஷனர் பி.தயானந்த் தெரிவித்தார்.
அண்மையில் இது குறித்து நடைபெற்ற கூட்டத்தில் கலந்து கொண்டு அவர் பேசியது: விநாயகர் சிலைகளை வைத்து வழிபடும் குழுக்கள், அமைப்பாளர்கள், சங்கங்கள் மற்றும் அமைப்புகளின் தலைவர்களுடன் அமைதிக்கான கூட்டங்கள் மாநகரின் அனைத்து காவல் நிலையங்களிலும் நடைபெற்றுள்ளன. விநாயகர் கொண்டாட்டத்தில் எந்தவொரு விரும்பத்தகாத சம்பவங்களும் ஏற்படுவதைத் தடுக்க கவனமாக இருக்க வேண்டும்.
ஆலோசனை மற்றும் அறிவுறுத்தல்களைப் பின்பற்ற வேண்டும்.
விநாயகர் சிலை விசர்ஜனம் செய்வதற்காக நடைபெறும் ஊர்வலத்தின் போது, பரிந்துரைக்கப்பட்ட பாதைகள் மற்றும் பரிந்துரைக்கப்பட்ட இடங்களில் விநாயகர் சிலைகளை விசர்ஜனம் வேண்டும் என்றார்.
பெங்களூரு மாநகராட்சி தலைமை ஆணையர் துஷர் கிரினாத் கூறியது: நகராட்சியின் 63 துணைப்பிரிவுகள் விநாயகர் திருவிழாவை அமைதியான முறையில் கொண்டாட, பெங்களூரு மாநகராட்சி, பெஸ்காம் மற்றும் தீயணைப்புத் துறைகளிடமிருந்து அனுமதியை ஒற்றை சாளர முறையில் பெரும் வகையில் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்த துறைகளிடம் விநாயகர் சிலை வைத்து வழிபட அனுமதி பெற உதவுகின்றன. அமைப்பாளர்கள் இந்த துறைகளிடமிருந்து அனுமதி பெறலாம். விண்ணப்பம் செலுத்திய 48 மணிநேரத்திற்குள், அனுமதி வழங்கப்படுகிறது.
அதிக நெரிசலான இடத்தில் சி.சி.டி.வி கேமராக்கள் நிறுவப்பட வேண்டும். சம்பந்தப்பட்டவர்கள் வகுப்புவாத இணக்கத்தை உறுதிப்படுத்த வேண்டும். மாநகராட்சி அதிகார வரம்பில் இந்த முறை விநாயகர் கொண்டாட்டத்தின் போது இப்பகுதியில் ஃப்ளெக்ஸ் மற்றும் பேனர்கள் வைக்க அனுமதி இல்லை.
சுற்றுச்சூழல் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு, சுற்றுச்சூழல் நட்பு விநாயகர் சிலைகளைப் பயன்படுத்துமாறு மக்களிடம் அவர் கேட்டுக் கொண்டார்.
விநாயகர் சிலைகலை விசர்ஜனம் செய்ய சாங்கி ஏரி, உல்சூர் ஏரி, எடியூர் ஏரி, ஹெப்பல் ஏரி மற்றும் பிற முக்கிய இடங்களில் ஏற்பாடு செய்யப்படும்.
விநாயகர் சிலைகளை விசர்ஜனம் செய்ய செல்லும்போது சாலைகளில் வாகனங்கள் சீராக செல்ல தகுந்த ஏற்பாடு செய்யப்படும். விநாயகர் சிலைகள் விசர்ஜனம் செய்யும் இடங்களில் சிசிடிவி, மின்சார விளக்குகள், திறமையான நீச்சல் வீரர்கள் மற்றும் ஏரியின் அருகே கிரேன் வசதிகள் வழங்கப்படும் என்றார்.