பொது சிவில் சட்டம் தேவையில்லை: மத்திய அரசுக்கு கடிதம்

புதுடெல்லி, நவ. 5- இந்தியாவின் அனைத்து தனிச்சட்டங்களும் போதுமானது என்பதால் பொது சிவில் சட்டம் தேவை இல்லை எனக் குரல்கள் எழத் துவங்கி உள்ளன. இந்த விவகாரம் தொடர்பாக நாடாளுமன்ற மாநிலங்களவை சட்டத்துறை நிலைக்குழுவுக்கு, தமிழ்நாடு இஸ்லாமிய இயக்கங்கள் மற்றும் அரசியல் கட்சிகளின் கூட்டமைப்பு கடிதம் எழுதியுள்ளது.
பொது சிவில் சட்டத்தை அமலாக்கும் முயற்சியாக நாடாளுமன்ற மாநிலங்களவையின் சட்டத்துறைக்கான நிலைக்குழுவால் ‘தனிச்சட்டங்கள் சீர்திருத்தம்’ எனும் பெயரில் கருத்துக்கள் கேட்கப்பட்டன. அக்டோபர் 10 -ல் கேட்கப்பட்டதன் அடிப்படையில் தமிழக அரசும் கருத்து கேட்க ஒரு குழுவை அமைத்துள்ளது.எனினும், இந்த தகவல்கள் ஏனோ வெளியில் பெரிதாக அறியப்படவில்லை. இச்சூழலில், இதுகுறித்த செய்தி கடந்த மாதம் 31-ல் ‘இந்து தமிழ்’ நாளேட்டில் வெளியானது. இதன் தாக்கமாக முஸ்லிம்கள் தரப்பு தமது கருத்துக்களுடன் எதிர்ப்புகளையும் மாநிலங்களவைக்கு அனுப்பி பதிவு செய்யத் துவங்கி உள்ளன. இந்தவகையில், தமிழ்நாடு இஸ்லாமிய இயக்கங்கள் மற்றும் அரசியல் கட்சிகளின் கூட்டமைப்பின் சார்பிலும் ஒரு கடிதம் மாநிலங்களவை நிலைக்குழுவுக்கு அனுப்பப்பட்டுள்ளது.