பொன்முடிக்கு பதவி பிரமாணம் செய்து வைக்காமல் டெல்லி பறந்த கவர்னர்

சென்னை, மார்ச் 14:
தமிழ்நாட்டின் ஆளுநர் ரவி டெல்லி சென்றுள்ளதால், அமைச்சராக பதவி ஏற்கவிருந்து பொன்முடியின் பதவி ஏற்பு நிகழ்ச்சி தள்ளிப் போய் உள்ளது.
வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக தொடரப்பட்ட வழக்கில் பொன்முடி, அவரது மனைவி விசாலாட்சிக்கு உயர்நீதிமன்றம் மூன்று ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்ததை அடுத்து அவர் எம்எல்ஏ பதவியில் இருந்து தகுதிநீக்கம் செய்யப்பட்டார். இதனால், அமைச்சர் பதவியையும் இழந்தார்.
இந்த நிலையில், உயர்நீதிமன்ற தீர்ப்புக்கு தடை விதித்து உச்சநீதிமன்றம் 11ஆம் தேதி உத்தரவிட்டது. புதன்கிழமை காலை தீர்ப்பின் நகல் கிடைத்ததை தொடர்ந்து, பொன்முடிக்கு மீண்டும் எம்எல்ஏ பதவி வழங்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து, பொன்முடிக்கு மீண்டும் அமைச்சராக பதவிப் பிரமாணம் செய்து வைக்கக் கோரி தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆளுநருக்கு புதன்கிழமை கடிதம் எழுதியிருந்தார்.
முதல்வரின் கோரிக்கையை ஏற்று இன்று காலை பொன்முடிக்கு ஆளுநர் பதவிப் பிரமாணம் செய்து வைப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், திடீர் பயணமாக ஆளுநர் டெல்லி புறப்பட்டுச் சென்றார். இன்று காலை விமானம் மூலம் தில்லி புறப்பட்டுச் சென்ற ஆளுநர் ஆர்.என்.ரவி, மீண்டும் 16-ஆம் தேதிதான் சென்னை திரும்புகிறார். இதனால், பொன்முடியின் அமைச்சர் பதவியேற்பு நிகழ்ச்சி தள்ளிப் போய் உள்ளது.