
சென்னை: அக்டோபர் 15-
தமிழகத்தில், போதைப்பொருள் கடத்தலில் ஈடுபடும் வெளிமாநிலத்தவர்களில், ஒடிசா, கேரளா மற்றும் ஆந்திராவை சேர்ந்தவர்களும், வெளிநாட்டவர்களில் இலங்கை மற்றும் நைஜீரிய நாட்டவர்களும் அதிகளவில் இருப்பது, போலீசார் மேற்கொண்ட ஆய்வில் தெரியவந்துள்ளது.
தமிழகத்திற்குள், கஞ்சா, மெத் ஆம்பெட்டமைன் உள்ளிட்ட போதைப்பொருட்கள் கடத்தலில், ஆந்திரா, கேரளா என, 11 மாநிலங்களை சேர்ந்தோர் ஈடுபட்டு வருகின்றனர்.
அதேபோல, இலங்கை, நைஜீரியா, சூடான், செர்பியா, கென்யா, கானா, தான்சானியா போன்ற வெளிநாடுகளைச் சேர்ந்தவர்கள், ‘சிந்தடிக்’ எனும் மெத் ஆம்பெட்டமைன், ஆம்பெட்டமைன், ஹெராயின், கோகைன், கஞ்சா எண்ணெய் உள்ளிட்ட போதை பொருட்களை கடத்தி வருகின்றனர்.சர்வதேச போதைப்பொருள் கும்பலின், ‘நெட்ஒர்க்’ குறித்து, இ.பி.சி.ஐ.டி., எனும் அமலாக்கப் பணியக குற்றப்புலனாய்வு துறை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்த ஆண்டில் செப்டம்பர் மாதம் வரை, தமிழகத்திற்குள் போதைப்பொருள் கடத்தலில் கைதான வெளி மாநிலத்தவர்கள் மற்றும் வெளிநாட்டினர் குறித்து ஆய்வு செய்ததில், ஒடிசா, ஆந்திரா, மற்றும் கேரள மாநிலத்தவர்களும், நைஜீரியா, இலங்கையை சேர்ந்தோரும் அதிகம் இருப்பதாக, போலீஸ் அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.














