போதை பொருள் கடத்தல்- ஜாபர் சாதிக் கூட்டாளி கைது

சென்னை: மார்ச் 13: ஜாபர் சாதிக் கூட்டாளி சதா என்பவரை மத்திய போதைப்பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகள் கைது செய்தனர். டெல்லியில் அண்மையில் ரூ.2,000 கோடி சூடோபெட்ரைன் போதைப்பொருள் கடத்தல் வழக்கில் கடந்த மாதம் 3 பேர் கைது செய்யப்பட்டனர். மேலும் மூளையாகச் செயல்பட்ட தமிழ் திரைப்பட தயாரிப்பாளரான ஜாபர் சாதிக்கை விசாரிக்க முயன்றபோது தலைமறைவாகிவிட்டார். இதைத் தொடர்ந்து அவர் வெளிநாடு தப்பிச் செல்வதை தடுக்க, அனைத்து விமான நிலையங்களுக்கும் லுக்-அவுட் நோட்டீஸ் கொடுக்கப்பட்டது. அவரது 8 வங்கி கணக்குகளும் முடக்கப்பட்டது.
தொடர்ந்து கைது செய்யப்பட்ட 3 பேர் அளித்த தகவலில் ஜாபர் சாதிக் கடந்த வாரம் டெல்லியில் கைது செய்யப்பட்டிருந்தார். போதைப்பொருள் கடத்தல் வழக்கில் டெல்லியில் கைதான ஜாபர் சாதிக்கிடம் விசாரணை நடைபெறுகிறது. டெல்லியில் ஜாபர் சாதிக்கிடம் விசாரணை நடத்தப்பட்டு வரும் நிலையில், அவரது கூட்டாளியான சதா கைது செய்யப்பட்டுள்ளார்.உணவுப் பொருட்களுடன் போதைப்பொருளை கலந்து அனுப்பி கத்த உதவிய சதா என்பவர் சென்னையில் கைது செய்யப்பட்டுள்ளார்.
டெல்லியில் ரூ.2 ஆயிரம் கோடி போதைப்பொருள் பறிமுதல் வழக்கில் கைது செய்யப்படும் 5வது நபர் சதா ஆவார். சென்னையில் சதாவை கைது செய்த போதைப்பொருள் தடுப்பு பிரிவினர் விசாரணையை தீவிரப்படுத்தியுள்ளனர்.