போராட்டங்களால் திணறும் டெல்லி

டெல்லி: ஜூன். 20 – அக்னி பாதை திட்டத்துக்கு எதிரான போராட்டத்தால் டெல்லி எல்லையில் போக்குவரத்து முடங்கியது. ராணுவம், கடற்படை, விமானப்படை ஆகியவற்றில் 17.5 வயதில் இருந்து 21 வயதுக்குட்பட்டவர்களை ஒப்பந்த அடிப்படையில் 4 ஆண்டுக்கு பணிக்கு சேர்த்துக் கொள்ளும் ‘அக்னி பாதை’ திட்டத்தை ஒன்றிய பாதுகாப்புதுறை அமைச்சர் ராஜ்நாத் சிங் கடந்த 13ம் தேதி அறிமுகம் செய்தார். ராணுவத்துக்கு ஒப்பந்த அடிப்படையில் ஆள் எடுக்கும் அக்னி பாதை திட்டத்துக்கு இளைஞர்கள் தரப்பில் கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டு நாடு தழுவிய போராட்டங்கள் வெடித்துள்ளது. பீகார் உட்பட நாடு முழுவதும் 12 ரயில்களுக்கு மேலாக தீவைக்கப்பட்டன.இந்த நிலையில், அக்னி பாதை திட்டத்துக்கு எதிரான போராட்டத்தால் டெல்லி எல்லையில் போக்குவரத்து முடங்கியுள்ளது. நூற்றுக்கணக்கான வாகனங்கள் டெல்லிக்குள் வர முடியாமல் தேக்கமடைந்துள்ளன.டெல்லி – நொய்டா எல்லையில் பல கி.மீ. தூரத்துக்கு வாகனங்கள் அணிவகுத்து நிற்கின்றன. அக்னி பாதை திட்டத்துக்கு எதிராக பாரத் பந்த் நடைபெறுவதால் நாடு முழுவதும் ரயில் நிலையங்களுக்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இதனிடையே அக்னி பாதை திட்டத்துக்கு எதிராக நாடு தழுவிய போராட்டத்தை ஒட்டி ஜார்க்கண்டில் பள்ளிகள் மூடப்பட்டிருக்கின்றன.