போலிக்கு முதல்வர் சித்தராமையா குமாரசாமி கடும் விமர்சனம்

பெங்களூரு, நவ. 13- தெலங்கானா தேர்தல் பிரசாரத்தில் அரசு பணியிடங்கள் காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் நிரப்புவோம் என்று பேசிய முதல்வர் சித்தராமையா, கர்நாடகாவில் காலியாக உள்ள 2 லட்சம் அரசு காலிப்பணியிடங்களை எப்போது நிரப்புவார் என்று தெரிவிக்க வேண்டும். கர்நாடகாவின் போலி முதல்வர் சித்தராமையா தெலங்கானா பிரசாரத்தில் கேலி பொருளாகிவிட்டார் என்று முன்னாள் முதல்வர் குமாரசாமி தெரிவித்தார்.பெங்களூருவில் உள்ள மஜத கட்சி அலுவலகமான ஜேபி பவனில் செய்தியாளர்களை சந்தித்து பேசிய முன்னாள் முதல்வரும், மஜத தலைவருமான எச்.டி.குமாரசாமி, மாநிலத்தில் போலி முதல்வர் உள்ளார். தெலங்கானா சட்டப்பேரவை தேர்தல் பிரசாரத்திற்கு சென்ற சித்தராமையா, கேலி பொருளானார். உத்தரவாதம் என்ற பெயரில் கர்நாடக மக்களின் காதுகளை மகிழ்வித்தவர்கள், தெலங்கானாவிற்கு சென்று அம்மாநில மக்களுக்கும் பொய்யான வாக்குறுதிகளை அளிக்கின்றனர். தெலங்கானாவில் காங்கிரஸ் கட்சி ஆட்சிக்கு வந்தால் 2 லட்சம் அரசுப்பணி காலியிடங்களை நிரப்புவோம் என்று சித்தராமையா கூறியிருக்கிறார். கர்நாடகாவில் 2 லட்சத்துக்கும் அதிகமான அரசு பணியிடங்கள் காலியாக உள்ளன. முதலில் அதை நிரப்ப வேண்டும்.அமைச்சர் ஒருவர் முதல்வர் சித்தராமையாவுக்கு பரிசாக வழங்கியதாக கூறப்படும் வெளிநாட்டு சோபா செட்டின் விலை ரூ 1 கோடியே 90 லட்சம் ஆகும். முதல்வர் வீட்டில் மாநாடு அரங்கம் கட்டப்பட்டுள்ளது. அதற்கு எவ்வளவு செலவானது என்று தெரியவில்லை. செய்தியாளர்கள் அங்கு அனுமதிக்கப்பட்டார்களா இல்லையா என்று எனக்கு தெரியவில்லை. அதன் மதிப்பு ரூ 3 கோடிக்கும் மேல் என்று சொல்லப்படுகிறது. இவை அனைத்திற்கும் சித்தராமையா பதிலளிக்க வேண்டும். கர்நாடகாவுக்கு இப்போது ரூ 5,71,665 கோடி கடன் உள்ளது. இந்நிலையில், ரூ 65,815 கோடி கடன் இலக்கு நிர்ணயித்துள்ளார்கள். வறட்சியால் மாநிலம் நிலைகுலைந்துள்ளது. ஆனால் மாநிலத்தில் பணத்துக்கு மட்டும் தட்டுப்பாடே இல்லை. கருப்பு பணத்துக்கு பஞ்சம் இல்லை. ஒரு ஒப்பந்ததாரர் வீட்டில் மட்டும் ரூ.42 கோடி சிக்கியது’ என்றார்.