
சென்னை, மே 30 –
கொலைக் குற்றச் சம்பவங்களில், வழக்குகளை விரைவில் முடிக்க வேண்டும் என்று போலி குற்றவாளிகளைக் கைது செய்யும் ஸ்டாலின் மாடல் அரசுக்கு கண்டனம் தெரிவிப்பதாக எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
அதிமுக பொதுச் செயலாளரும் சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி மு. பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், “நாடு முழுவதும் பல்வேறு மாநிலங்களில் பல்வேறு குற்றச் சம்பவங்கள் நடைபெறுகின்றன. ஆங்காங்கே உள்ள காவல் துறையினர் அரும்பாடுபட்டு உண்மைக் குற்றவாளிகளைப் பிடிப்பது சகஜமான ஒன்றாகும். ஆனால் தமிழ் நாட்டில், ஸ்டாலின் மாடல் திமுக ஆட்சியில், கொலைக் குற்ற வழக்குகளை விரைவில் முடிக்க வேண்டும் என்ற நோக்கத்தோடு உண்மைக் குற்றவாளிகளை தப்பவிட்டுவிட்டு, அவசர கதியில் குற்றங்களுக்கு சம்பந்தம் இல்லாதவர்களைக் கைது செய்து சிறையில் அடைக்கும் போக்கு நடைபெற்று வருவது கொடூரத்தின் உச்சமாகும்.
தமிழகத்தில் ஸ்டாலின் மாடல் திமுக அரசு பொறுப்பேற்றது முதல் கொலை, கொள்ளை, பாலியல் வன்கொடுமை, போதைப் பொருட்கள் கடத்தல், சிறுமிகள் முதல் மூதாட்டிகள் வரை பாலியல் வன்கொடுமைக்கு ஆளாவது, அவர்களில் ஒருசிலர் உயிரிழப்பது சர்வ சாதாரணமாகிவிட்டது. குறிப்பாக, தனியாக வசிக்கும் வயது முதிர்ந்தவர்கள் கொல்லப்படுவதும், அவர்களிடமிருந்து நகைகள் உட்பட விலை உயர்ந்த பொருட்கள் கொள்ளையடிக்கப்படுவதும் சமீப காலமாக அதிகரித்து வருகின்றன.ஒவ்வொரு சம்பவம் நிகழும்போதும் தனிப் படைகள் அமைக்கப்பட்டு குற்றவாளிகளைத் தேடிவருவதாக ஸ்டாலின் மாடல் அரசின் காவல்துறை சார்பில் தெரிவிக்கப்படுகிறது. விடியா திமுக அரசு பொறுப்பேற்றது முதல் இதுபோன்ற சம்பவங்கள் அதிகரித்துள்ளது என்று பலமுறை நான் சட்டமன்றத்தில், இந்த அரசின் கவனத்தை ஈர்த்திருக்கிறேன். ஆனால், பொம்மை முதல்வர் எனக்கு பதில் அளிப்பதைத் தவிர, முதியவர்கள் மீதான தாக்குதலைத் தடுத்து நிறுத்துவதற்கு எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. முதியவர்கள் மீதான தாக்குதல் தொடர்ந்துகொண்டேதான் இருக்கிறது.கடந்த ஏப்ரல் மாதம் ஈரோடு மாவட்டம், சிவகிரியில் வயதான தம்பதிகள் படுகொலை செய்யப்பட்டு நகைகள் கொள்ளையடிக்கப்பட்டன. தொடர்ந்து, சிவகிரி சம்பவத்தில் கொலையாளிகள் 3 பேரையும், அவர்களிடமிருந்து கொள்ளையடிக்கப்பட்ட நகைகளை வாங்கியதாக ஒருவரையும் காவல்துறை கைது செய்ததாக, இவ்வழக்கை விசாரிக்க நியமிக்கப்பட்ட விசாரணை அதிகாரி தெரிவித்ததாகச் செய்திகள் கூறுகின்றன. மேலும், கைது செய்யப்பட்ட மூன்று குற்றவாளிகளும் ஏற்கெனவே, கடந்த பல ஆண்டுகளாக ஆங்காங்கே நடைபெற்ற 12 குற்றச் சம்பவங்களில் ஈடுபட்டதாகவும், அதில் 19 பேர் கொல்லப்பட்டதாகவும் ஒப்புக்கொண்டுள்ளனர் என்றும் செய்திகள் வந்துள்ளன.