போலி சாதி சான்றிதழ் விவகாரம்: நடிகை நவ்னீத் கவுருக்கு ரூ. 2 லட்சம் அபராதம்

போலி சாதி சான்றிதழ்: அமராவதி தனித்தொகுதி எம்.பி நடிகை நவ்னீத் கவுருக்கு மும்பை நீதிமன்றம் ரூ. 2 லட்சம் அபராதம் விதித்துள்ளது.
தெலுங்கில் முன்னணி நடிகையாக இருந்தவர் நவ்னீத் கவுர் தமிழில் அரசாங்கம், அம்பாசமுத்திரம் அம்பானி உள்பட பல படங்களில் நடித்து உள்ளார்.
கடந்த 2011 ஆம் ஆண்டு மராட்டிய மாநில சுயேட்சை எம்.எல்.ஏ ரவி ராணாவை திருமணம் செய்துகொண்டார். அமராவதி தொகுதியில், காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் கட்சிகளின் ஆதரவுடன் சுயேட்சையாக நின்று வெற்றி பெற்று எம்.பியானார்.
அமராவதி தனித்தொகுதியில் பட்டியலினத்தவர் என்று போலியாக சாதி சான்றிதழ் காட்டி நவ்னீத் கவுர் வெற்றி பெற்றுள்ளார் என குற்றச்சாட்டு எழுந்தது.
நவ்னீத் பஞ்சாபை சேர்ந்தவர் . மராட்டிய எஸ்.சி பிரிவிவின்கீழ் வராத லபானா சாதியை சேர்ந்தவர். தேர்தலுக்காக தனது சாதி சான்றிதழை போலியாக பள்ளியின் போலி ஆவணங்களைக் காட்டி பட்டியலினப் பெண் என்று சான்றிதழ் வாங்கிவிட்டார்” என்று சிவசேனா கட்சியின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஆனந்த் ராவ் மும்பை ஐகோர்ட்டில் நாக்பூர் கிளையில் வழக்கு தொடர்ந்தார்.
இந்த வழக்கின் விசாரணையில் இரு தரப்பின் வாதங்களையும் கேட்ட நீதிபதிகள் நவ்னீத் கவுரின் சாதி சான்றிதழை ரத்து செய்ததோடு 2 லட்சம் ரூபாய் அபராதமும் விதித்துள்ளனர். மேலும், ஆறு வாரங்களுக்குள் நவ்னீத் கவுர் அனைத்து சான்றிதழ்களையும் நீதிமன்றத்தில் ஒப்படைக்கவேண்டும் என்று உத்தரவிட்டு உள்ளனர்.