போலி டிக்கெட் மூலம் விமான நிலையத்திற்குள் நுழைந்த இளைஞர் கைது

பெங்களூரு, மார்ச் 13:
பெங்களூரு கெம்பேகவுடா சர்வதேச விமான நிலையத்திற்குள் போலி டிக்கெட் மூலம் சட்டவிரோதமாக நுழைந்த இளைஞரை சர்வதேச விமான நிலைய ஊழியர்கள் கைது செய்தனர்.
கைது செய்யப்பட்ட இளைஞர் ஜார்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்த பிரகர் ஸ்ரீவஸ்தவா (24). கைது செய்ய‌ப்பட்ட பிரகர் ஸ்ரீவஸ்தவாவின் நண்பரான சங்குர்தா டெல்லிக்கு செல்ல‌ பெங்களூரு விமான நிலையத்திற்கு வந்திருந்தார். நண்பரை வழி அனுப்புவதற்காக போலி பயணச்சீட்டு தயாரித்த பிரகர் ஸ்ரீவஸ்தவா, விமான நிலையத்திற்கு வந்துள்ளார்.
போலி டிக்கெட் காட்டி விமான நிலையத்திற்குள் நுழைந்தார். ஆனால் விமானத்தில் பறக்காமல், நண்பரை வழி அனுப்பிவிட்டு, பின்னர் கேட் எண் 9வது பாதுகாவலரிடம், ​​தனக்கு அவசர அழைப்பு வந்துள்ளது, அதனால் விமானத்தில் பறக்காமல் திரும்பிச் செல்கிறேன் என்றார்.
பாதுகாவலர், பிரகாரின் பயணச் சீட்டில் சந்தேகமடைந்து மறு ஆய்வு செய்ததில் அது போலியானது என தெரியவந்தது.
பிரகாரை உடனடியாக விமான நிலைய போலீசார் காவலில் எடுத்து தீவிர விசாரணை நடத்தியதில், குற்றம் சாட்டப்பட்டவர் தனது நண்பரை வழி அனுப்புவதற்காக விமான டிக்கெட்டை போலியாக தயாரித்ததை ஒப்புக்கொண்டார்.விமான நிலையத்திற்குள் அத்துமீறி நுழைந்தது, போலி டிக்கெட் தயாரித்து, பெங்களூரு சர்வதேச விமான நிலையத்தில் மோசடி செய்ததாக குற்றம் சாட்டப்பட்டவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.பெங்களூரு சர்வதேச‌ விமான நிலையத்தில் சமீபத்தில் பதிவான இரண்டாவது வழக்கு இதுவாகும். கடந்த ஆண்டு நவம்பரில் ஜார்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்த 26 வயதான ஹர்ப்ரீத் கவுர் சைனி என்ற தொழில்நுட்பவியலாளர் டிக்கெட் இல்லாமலேயே விமான நிலையத்திற்குள் நுழைந்தார். பின்னர் அவர் கைது செய்யப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.