போலி பத்திரம் தயாரித்து நிலம் விற்று ரூ.6 கோடி மோசடி 7 பேர் கைது

பெங்களூர்: செப்டம்பர். 16 – அரசு சர்வரை ஹேக் செய்து ஆர் டி சி தயாரித்து அசல் பத்திரம் போல் நம்பவைத்து நிலங்களை விற்று வந்த 7 பேரை ராம்நகர் போலீசார் கைது செய்துள்ளனர். சிக்கமரிகௌடா , நரசிம்மமூர்த்தி , ராகவமூர்த்தி , அருண் , சந்தீஷ் , மற்றும் சிவராஜு ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ள குற்றவாளிகள். இவர்கள் அனைவரும் ரியல் எஸ்டேட் ஏஜென்ட் , சைபர் உரிமையாளர் , ப்ரோக்கர் மற்றும் மாவட்ட அதிகாரி அலுவலகத்தின் ஹார்ட்வேர் பொறியாளர்களாக உள்ளனர். நிலத்தை வாங்கிய ஒருவன் உட்பட ஏழு பேருக்கும் எதிராக முதல் தகவல் அறிக்கை பதிவாகியுள்ளது.
மேலும் சில குற்றவாளிகளுக்காக சி இ என் குற்றப்பிரிவு போலீசார் தேடுதல் வேட்டையில் இறங்கியுள்ளனர். அரசு சர்வரில் உள்ள தொழில்நுட்ப பின்னடைவுகளே இவர்களுக்கு மிகவும் உதவியாயிருந்துள்ளது. அரசின் சர்வரை ஹேக் செய்து ஆவணங்கள் பத்திரங்கள் தயாரித்திருப்பது தெரிய வந்துள்ளது.
துணை மாவட்ட அதிகாரிகள் , தாசீல்தார்கள் , ஆகியோரால் செய்ய முடியாத வேலைகளை இவர்கள் செய்து பயனாளிகளுக்கு ஆர் டி சி விநியோகித்து வந்துள்ளனர். தவிர அரசு சர்வரை ஹேக் செய்து நில ஆவணங்களையும் தொழில்நுட்பம் பயன்படுத்தி அப் லோட் செய்துவந்துள்ளனர். ஏற்கெனவே இவர்கள் ஏழு ஆர் டி சி உருவாக்கி ஆறு பேருக்கு நிலங்களை விற்றிருப்பதும் விசாரணையில் தெரிய வந்துள்ளது. கனகபுரா தாலூகாவின் பன்னிகுப்பே , துகணி , ராம்புரா ஆகிய பகுதிகளில் 6 ஏக்கர் நிலங்களை விற்பனை செய்து அரசுக்கு சுமார் ஆறு கோடி ருபாய் அளவிற்கு மோசடி செய்துள்ளனர்.