போலி பிறப்புச் சான்றிதழ் வழக்கு: ஆசம் கான், மனைவி, மகனுக்கு 7 ஆண்டு சிறை

ராம்பூர், அக். 19- போலி பிறப்புச் சான்றிதழ் வழக்கில் சமாஜ்வாதி மூத்த தலைவர் ஆசம் கான், அவரது மனைவி மற்றும் மகனுக்கு உ.பி.யின் ராம்பூர் நீதிமன்றம் 7 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்துள்ளது. சமாஜ்வாதி கட்சியின் மூத்த தலைவர் ஆசம் கானின் மகன் அப்துல்லா ஆசம். இவர், லக்னோவில் ஒன்று, ராம்பூரில் மற்றொன்று என 2 பிறப்புச் சான்றிதழ் பெற்றுள்ளதாகவும் இதற்கு ஆசம் கான் மற்றும் அவரது மனைவி தசீம் பாத்திமா உதவியதாகவும் புகார் எழுந்தது. ராம்பூரின் கஞ்ச் காவல் நிலையத்தில் பாஜக எம்எல்ஏ ஆகாஷ் சக்சேனா அளித்த புகாரின் அடிப்படையில் கடந்த 2019-ம் ஆண்டு ஜனவரியில் வழக்கு பதியப்பட்டது. இந்த வழக்கு விசாரணை ராம்பூரில் உள்ள சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்த வழக்கில் தாக்கல் செய்யப்பட்ட குற்றப்பத்திரிகையில், “ராம்பூர் நகராட்சி அளித்த பிறப்புச் சான்றிதழில் அப்துல்லா ஆசமின் பிறந்த தேதி, 1993 ஜனவரி 1 எனவும் லக்னோ நகராட்சி அளித்த பிறப்பு சான்றிதழில் 1990, செப்டம்பர் 30 எனவும் உள்ளது. ஆசம் கான், தசீம் பாத்திமா அளித்த உறுதிமொழி சான்றிதழ் அடிப்படையில் ராம்பூரில் பிறப்புச் சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது” என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.
-இந்த வழக்கில் ஆசம் கான், அவரது மனைவி தசீம் பாத்திமா, மகன் அப்துல்லா ஆசம் ஆகிய மூவரும் குற்றவாளிகள் என நீதிபதி ஷோபித் பன்சால் நேற்று தீர்ப்பு வழங்கினார். இதையடுத்து மூவருக்கும் அவர் 7 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்தார். இதைத் தொடர்ந்து மூவரும் நீதிமன்றத்தில் இருந்து சிறைக்கு கொண்டு செல்லப்பட்டனர். உ.பி.யில் கடந்த 2017-ல் பாஜக ஆட்சிக்கு வந்த பிறகு ஆசம் கான் மீது நில அபகரிப்பு, மோசடி உள்ளிட்ட குற்றச்சாட்டுகளின் கீழ்81 வழக்குகள் பதிவு செய்யப்பட் டுள்ளன. அவரது மனைவி, மகன்மீதும் வழக்குகள் பதிவு செய்யப் பட்டன.