போலீசாரை ஆரத்தி எடுத்து வரவேற்ற சர்மிளா

திருப்பதி, ஆக. 19 தெலுங்கானா மாநிலத்தில் தலித் மக்கள் பயன் பெறும் வகையில் தலித் பந்து என்ற திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. தகுதி உள்ள நபர்கள் பயன்பெறும் வகையில் இந்த திட்டத்தை மாநிலம் முழுவதும் விரிவுபடுத்த வேண்டும் என தலித் மக்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். தெலுங்கானா முதலமைச்சர் சந்திரசேகர ராவ் தொகுதியான கஜ்வெல்லில் போராட்டம் நடத்தி வரும் மக்களுக்கு ஆந்திர முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டியின் தங்கை சர்மிளா ஆதரவு தெரிவித்துள்ளார்.போராட்டத்தில் ஈடுபட்டு வரும் மக்களை சந்திக்கநேற்று தனது இல்லத்தில் சர்மிளா புறப்பட்டார்.அப்போது வீட்டுக்கு வெளியே தயார் நிலையில் இருந்த போலீசார் சர்மிளாவை தடுத்து நிறுத்தினர். போராட்டம் நடைபெறும் இடத்திற்கு செல்ல அனுமதி இல்லை என போலீசார் தெரிவித்தனர். இதையடுத்து சர்மிளா தனது தொண்டர்களுடன் வீட்டின் முன்பாக தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார். மேலும் தன்னை தடுத்து நிறுத்திய போலீசாருக்கு கற்பூரம் ஏற்றி ஆரத்தி எடுத்து வரவேற்றார்.அவர்களுக்கு ஞானமும், சன்மார்க்கமும் கிடைக்க இறைவனை வேண்டி பிரார்த்திக்கிறேன். போலீசார் அரசியல் சாசனத்தை கடைபிடிக்க வேண்டும் என தெரிவித்தார். இதையடுத்து போலீசார் சர்மிளாவை வீட்டு காவலில் வைத்தனர் இது குறித்து சர்மிளா கூறுகையில் :- எதிர்க்கட்சிகளுக்கு எதிராக முதலமைச்சர் சந்திரசேகர ராவ் அடக்கு முறையை பயன்படுத்துகிறார். எதிர்க்கட்சி தலைவர் என்ற முறையில் போராட்டத்தில் ஈடுபவர்களை சந்திக்க எனக்கு உரிமை உள்ளது. மக்களுக்கு ஆதரவாக குரல் எழுப்பக் கூடாதா. என்னை குறி வைத்து வீட்டு காவலில் வைப்பது வெட்கக்கேடானது என கூறினார்.