போலீசாரை தாக்கி தப்பி ஓடிய ரவுடி சுட்டு பிடிப்பு

பெங்களூர்: நவம்பர். 23 – மகஜர் நடத்த போலீசாரால் அழைத்து செல்லப்பட்ட போலீசாரையே சிமெண்ட் செங்கல்லால் தாக்கி தப்பியோட முயற்சித்த பிரபல வழிப்பறியாளன் யோகானந்த் என்ற இரவு ஷிப்ட் யோகி என்ற ரௌடியை நெலமங்களா போலீசார் துப்பாக்கியால் சுட்டு கைது செய்துள்ளனர். தன்னுடைய காலில் போலிஸாரின் குண்டு தாக்குதல் காயமடைந்துள்ள யோகானந்த தற்போது மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறான். அவன் உயிராபத்திலிருந்து தப்பியுள்ளான். பிரபல வழிப்பறி கொள்ளையனான யோகாநந்தாவை கைது செய்த நெலமங்களா போலீசார் மகஜர் நடத்த அவனை தானோஜிபால்யா பகுதிக்கு அழைத்து சென்ற போது போலீசாரை தாக்கிவிட்டு தப்பியோட முயற்சி செய்துள்ளான். இவனை துரத்திப்பிடிக்க முயற்சித்த கான்ஸ்டபிள் ஹனுமந்தா ஹிப்பரி உட்பட போலீஸ் ஊழியர்களை சிமெண்ட் கல்லால் தாக்க முயற்சித்துள்ளான் . அப்போது தற்காப்புக்காக போலீசார் ஆகாயத்தில் சுட்டு எச்சரித்தும் மீண்டும் அவன் போலீசாரை தாக்க முயற்சித்த போது சுட்டதில் குற்றவாளியின் காலில் குண்டடிபட்டு சுருண்டு விழுந்துள்ளான். பின்னர் அவனை தங்கள் வசம் எடுத்த போலீசார் அவனை சிகிச்சைக்காக அருகில் உள்ள மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். இந்த தாக்குதலில் காயமடைந்த ஹநுமத்தா ஹிப்பரகி என்ற கான்ஸ்டபிளும் கைகளுக்கு காயமடைந்துள்ள நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். வழிப்பறி கொள்ளையன் யோகானந்தாவிற்கு எதிராக வழிப்பறி மிரட்டல் உட்பட பல்வேறு தீவிர 18 புகார்கள் நகரின் பல போலீஸ் நிலையங்களில் பதிவாகியுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது .