போலீஸாக இருந்து சாமியாராக மாறிய போலே பாபா

புதுடெல்லி: ஜூலை 3 ஹாத்ரஸ் சம்பவத்துக்கு காரணமான போலே பாபா, உத்தர பிரதேசக் காவல்துறையில் பணியாற்றியுள்ளார். 18 வருடங்களுக்கு முன் காவல்துறை பணியை ராஜினாமா செய்துவிட்டு ஆன்மிகப் பிரச்சாரத்தை தொடங்கியது தற்போது தெரியவந்துள்ளது.
உ.பி.யின் ஹாத்ரஸில் நடைபெற்ற நெரிசல் சம்பவத்தில் 122 பேர் உயிரிழந்தனர். இவர்கள் கலந்துகொண்ட மத வழிபாட்டுக் கூட்டத்தை நடத்தியவர் சத்சங் நாராயண் சாகர் விஷ்வ ஹரிபோலே பாபா. இவரது இயற்பெயர்சூரஜ் பால். ஹாத்ரஸுக்கு அருகிலுள்ள காஸ்கன்ச் மாவட்டத்தின் பட்யாலி கிராமத்தை சேர்ந்தவர்.
கடந்த 18 வருடங்களுக்கு முன் உ.பி.யின் காவல்துறையில் கான்ஸ்டபிளாக பணியாற்றியவர். உ.பி.யின் உளவுத்துறையிலும் சூரஜ் பால் பணியாற்றி உள்ளார். இந்த பணியின்போது பல்வேறு வழக்குகளில் பொதுமக்கள் பிரச்சினையை பேசி சமாளிப்பதில் வல்லவராக இருந்துள்ளார்.
இத்துடன், பல்வேறு ஆன்மிக போதனைகளையும் கேட்டு அதுதொடர்பாக விரிவாகப் பேசவும்கற்றுத் திறனாய்வு பெற்றுள்ளார். தன் பணியின் இறுதிக் காலத்திலேயே ஆன்மிகப் பிரச்சாரத்தைதுவக்கியவருக்கு கிராமவாசிகளின் ஆதரவு அதிகமாகக் கிடைத்துள்ளது. இதனால், தனது உ.பி.காவல்துறை பணியை ராஜினாமா செய்தார் சூரஜ்பால். இவரதுபேச்சால் கிராமவாசிகள் கவரப்பட்டனர். பொதுமக்கள் அவரை போலே பாபா(அப்பாவி ஆன்மிகவாதி) என்றழைக்கத் துவங்கி உள்ளனர்.
இவரது நடை, உடை மற்றும் பாவனைகள் எதுவும் வழக்கமான துறவிகள் போல் இல்லாதது, கிராமவாசிகளை பெரிதும் கவர்ந்துள்ளது. காவிநிற குர்தா பைஜாமாஅல்லது காவிநிற வேட்டி, குர்தாவை அணிவது துறவிகள் வழக்கம்.
ஆனால், போலே பாபா சாதாரண மனிதர்கள் போல் அன்றாடம் பேண்ட், சட்டை மற்றும் கோட் சூட்களையே அணிந்து வந்துள்ளார். அவர் பெரும்பாலும் வெள்ளை நிற பேண்ட், சட்டைகள் அணிவதையே வழக்கமாகக் கொண்டி ருந்தார்.
ஒரு துறவியின் வாழ்க்கையை போல் அல்லாமல் பணக்கார மக்களைப் போல வாழ்ந்து வந்துள்ளார் போலே பாபா. மிகவும் விலை உயர்ந்த கவர்ச்சிகரமான ராஜசிம்மாசனத்தில் அமர்ந்தபடி போலே பாபா தன் பிரச்சார உரையை நடத்துவதும் வழக்கமாக இருந்துள்ளது. இதுபோன்ற நடவடிக்கைகளும் அவருக்கு வரவேற்பை பெற்றுத் தந்துள்ளன.
வட மாநிலங்களில் பல ஐஏஎஸ் மற்றும் ஐபிஎஸ் அதிகாரிகள் உள்ளிட்ட பல உயர் அதிகாரிகளும் தனது சீடர்கள் என பாபா பிரச்சாரத்தின்போது தெரிவிப்பது உண்டு. இவருக்கு குவியும் பல்வேறு நன்கொடைகள் மற்றும் ரொக்கங்களை தம்மிடம் வைத்துக் கொள்ளும் பழக்கம் பாபாவுக்கு இல்லை. அவற்றை பக்தர்களுக்கே வழங்கி விடுவார்