போலீஸ் நிலையத்தில் எம்.பி. தர்ணா

நாமக்கல்: மார்ச் 13: மணல் கடத்தலில் ஈடுபடுவோரை கைது செய்ய வலியுறுத்தி பரமத்திவேலூர் காவல் நிலையத்தில் நாமக்கல் எம்.பி. தரையில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூர் வழியாக காவிரி ஆறுபாய்கிறது. ஆற்றில் சில இடங்களில் மணல் திருட்டு நடப்பதாகப் புகார்கள் எழுந்தன. நேற்று முன்தினம் பரமத்தி வேலூர் அருகே உள்ள அணிச்சம்பாளையத்தில் காவல் துறையினர் கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டிருந்னர்.
அப்போது, அவ்வழியாக வந்த ஆட்டோவை நிறுத்தி சோதனையிட்டனர். அப்போது, ஆட்டோவில் மணல் இருந்ததும், பரமத்தி வேலூர் அருகேயுள்ள அணிச்சம்பாளையம் காவிரி ஆற்றில் இருந்து மணலைக் கடத்தி வந்ததும் தெரியவந்தது.
இதையடுத்து, மணல் கடத்தலில் ஈடுபட்டதாக அணிச்சம்பாளையம் மணிகண்டன் (25), பரமத்தி வேலூர் ராஜலிங்கம் (26), விஜயராஜ் (36) ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.