போலே பாபா பெயர் எப்ஐஆரில் இல்லை

புதுடெல்லி:ஜூலை 4-
ஹாத்ரஸ் நெரிசல் சம்பவத்தில் 121 பேர் உயிரிழந்த நிலையில் அதுதொடர்பாக வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணை தொடங்கி உள்ளது. இதற்கு காரணமாகக் கருதப்படும் போலே பாபா சாமியார் தலைமறைவான நிலையில் முதல் தகவல் அறிக்கையில் அவரது பெயர் இல்லை.
உத்தர பிரதேச மாநிலம் ஹாத்ரஸ் மாவட்டம் சிக்கந்தரராவ் தாலுகாவின் முகல்கடி கிராமத்தில்நேற்று முன்தினம் நடைபெற்ற மதவழிபாடு, ஆன்மிக சொற்பொழிவுக் கூட்டத்தில் நெரிசல் ஏற்பட்டது. இதில் 121 பேர் உயிரிழந்தனர். 38 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.நெரிசல் சம்பவம் தொடர்பாகசிக்கந்தரராவ் காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளன. இதில், கூட்டத்தின் முக்கியஅமைப்பாளரான தேவ்பிரகாஷ் மதுகர் மற்றும் பெயர் தெரியாத சிலர் மீது புகார்கள் பதிவாகி உள்ளன.
இப்புகாரின்படி வெறும் 80,000 பேர் கூடுவதற்காக மட்டுமே அனுமதி பெறப்பட்டிருந்தது. ஆனால், கூட்டத்தில் சுமார் இரண்டரை லட்சம் பேர் கலந்துகொண்டதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
பாரதிய நியாய சன்ஹிதா சட்டத்தின் 105, 110, 126(2), 223 மற்றும் 238 ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குகள் பதிவாகி உள்ளன. எனினும், நிகழ்ச்சிக்கு முக்கியக் காரணமான போலே பாபா சாமியார், சம்பவத்தில் நேரடித்தொடர்பு இல்லாததால்அவரது பெயர் முதல் தகவல்அறிக்கையில் சேர்க்கப்படவில்லை. சம்பவம் நடைபெற்ற சில நிமிடங்களிலேயே போலே பாபா தலைமறைவாகி விட்டார்.
இதுகுறித்து உ.பி. முதல்வரான யோகி ஆதித்யநாத் கூறும்போது, ‘இந்த சம்பவத்துக்கு காரணமான அனைவரையும் எங்கள் அரசு ஆழமாகத் தோண்டி பிடித்து தண்டிக்கும். இவர்களில் எவரும்தப்ப முடியாது. இந்த சம்பவம் ஒரு விபத்தா அல்லது திட்டமிட்ட சதியா? என முழு விசாரணைக்கு பிறகு தெரியும்’ எனத் தெரிவித்துள்ளார்.