மகளின் இறந்த உடலுடன் நான்கு நாட்கள் கழித்த தாய்

மண்டியா : மே 31 – நான்கு நாட்களாக மகளின் இறந்த உடலுடன் தாய் வசித்த பயங்கரமான சம்பவம் ஹாலஹள்ளி கெரேயின் புதிய தமிழ் காலனியில் நடந்துள்ளது . இந்த காலனியில் வசித்துவரும் ரூபா (30) இறந்துள்ளார். மகள் இறந்தது குறித்து யாருக்கும் தெரிவிக்காமல் தாய் நாகம்மா மகளின் இறந்த உடலுடனேயே நான்கு நாட்கள் இருந்துள்ளார். நான்கு நாட்களுக்கு முன்னரே ரூபா இறந்துள்ளார். ஆனால் தாய் நாகம்மா மகள் இறந்தது குறித்து யாருக்கும் தெரிவிக்க வில்லை. வீட்டின் கதவை தாழிட்டு கொண்டு உள்ளேயே இருந்துள்ளார். ஆனால் இறந்த உடலின் அழுகிய நாற்றம் வெளியே வர துவங்கியுள்ளது . ஆரம்பத்தில் எங்கோ எலியோ பூனையோ இறந்திருக்கும் என தேடிக்கொண்டிருந்த அக்கம் பக்கத்தார் பின்னர் தான் நாகம்மாவும் ரூபாவும் நான்கு நாட்களாக வெளியே வரவில்லை என்பதை உணர்ந்து பின்னர் சந்தேகம் வந்துள்ளது. பின்னர் மிக்ஸி ரிப்பேர் செய்ய வந்தவனை அழைத்து வீட்டின் கதவை உடைத்து பார்த்தபோது வீட்டுக்குள் இருந்த காட்சியை கண்டு மிரண்டு போயுள்ளனர். இறந்து போன மகள் ரூபாவின் உடல் அருகில் தாய் நாகம்மா உட்கார்ந்திருந்தார். இந்த அதிர்ச்சி நிலையிலும் அக்கம் பக்கத்தார் கிழக்கு பிரிவு போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவித்துள்ளனர். பின்னர் போலிஸாரின் உதவியுடன் இறந்து போன ரூபாவின் உடல் அகற்றப்பட்டது . இறந்து போன ரூபா வீட்டு பாதுகாவலாளியாக பணியாற்றி வந்துள்ளார். சில மாதங்களுக்கு முன்னர் ஏதோ காரணத்திற்க்காக பணிநீக்கம் செய்யப்பட்டிருந்தார். சமீபத்தில் மீண்டும் வேலைக்கு வருவதாக கடிதமும் எழுதியிருந்தார். கடந்த பத்து வருடங்களுக்கு முன்னர் திருமணம் ஆன ரூபா குடுமப தகராறால் ஐந்து வருடங்களுக்கு முன்னர் கணவன் மற்றும் இரண்டு குழந்தைகளை விட்டு கணவனிடமிருந்தும் பிரிந்து தாயுடன் வசித்து வந்துள்ளார். சில நாட்களாக தாய் மகள் இருவரும் குடிப்பழக்கத்துக்கு அடிமையாயிருந்துள்ளனர். இந்த சாவு குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.