
புது டில்லி, செப்.19-
பாராளுமன்ற சிறப்பு கூட்டத்தொடர் நேற்று பழைய கட்டிடத்தில் நடைபெற்றது. அப்போது பிரதமர் மற்றும் உறுப்பினர்கள் 75 ஆண்டு கால பாராளுமன்ற சாதனைகள், அனுபவங்கள், நினைவுகள் குறித்து உரையாற்றினர். இன்று புதிய பாராளுமன்ற கட்டிடத்திற்கு அவைகள் நகர்த்தப்படுகிறது. இதற்கிடையே நேற்று பிரதமர் மோடி தலைமையில் மத்திய அமைச்சரவை கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் மகளிர் இடஒதுக்கீடு மசோதாவுக்கு அமைச்சரவை ஒப்புதல் அளிக்கப்பட்டதாக செய்திகள் வெளியாகியுள்ளன. மகளிர் இடஒதுக்கீடு மசோதா குறித்து தற்போது பேசவில்லை கடந்த 1999-ம் ஆண்டில் இருந்தே பேசப்பட்டு வருகிறது. பெரும்பாலான தலைவர்கள் இடஒதுக்கீடு வேண்டும் என வலியுறுத்திய நிலையில், சில தலைவர்கள் நேரடியாக எதிர்ப்பு தெரிவித்தனர். என்றாலும் மசோதா பாராளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டு தோல்வியும் சந்தித்துள்ளது.
- 1996-ம் ஆண்டு முதல் முறையாக தேவேகவுடா தலைமையிலான அரசில் இம்மசோதா கொண்டுவரப்பட்டது, எனினும் மக்களவையில் தோல்வி அடைந்தது * 1998-ல் வாஜ்பாய் அரசில் இம்மசோதா மீண்டும் விவாதிக்கப்பட்டது. 1999, 2002, 2003 ஆண்டுகளிலும் வாஜ்பாய் அரசில் மீண்டும் அறிமுகப்படுத்தப்பட்டது. எனினும் நிறைவேறவில்லை * 2008-ம் ஆண்டு மன்மோகன் சிங் அரசில் மாநிலங்களவையில் இந்த மசோதா அறிமுகப்படுத்தப்பட்டு, நாடாளுமன்ற நிலைக்குழுவுக்கு அனுப்பப்பட்டது * 2009-ல் நிலைக்குழு அறிக்கை தாக்கல் செய்ய, 2010-ம் ஆண்டு ஒன்றிய அமைச்சரவை மசோதாவுக்கு ஒப்புதல் அளித்தது * 2010-ம் ஆண்டு மார்ச் 9-ம் தேதி மாநிலங்களவையில் இம்மசோதா நிறைவேறியது. எனினும், மக்களவையில் மசோதா எடுத்துக்கொள்ளவில்லை * 13 ஆண்டுகள் கழித்து மீண்டும் இப்போது இம்மசோதாவுக்கு மோடி அரசு ஒப்புதல் அளித்துள்ளது