மகளிர் இடஒதுக்கீடு மசோதாமுதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வரவேற்பு

சென்னை, செப். 20-முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது, நாடாளுமன்றத்திலும், சட்டமன்றங்களிலும் மகளிருக்கு 33 விழுக்காடு இடஒதுக்கீடு வழங்கும் மசோதா மக்களவையில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. மகளிர் மீது பா.ஜ.க.வுக்கு உண்மையான அக்கறை இருந்திருக்குமானால், ஆட்சிக்கு வந்ததும் இதனைக் கொண்டு வந்திருப்பார்கள்.
சர்ச்சைக்குரிய வேளாண் சட்டங்கள், குடியுரிமைத் திருத்தச் சட்டம், காஷ்மீர் சிறப்பு அந்தஸ்து பறிப்பு சட்டம் மற்றும் முற்பட்ட சாதியினருக்கு 10% இடஒதுக்கீடு வழங்கும் சட்டம் போன்றவற்றைக் கடும் எதிர்ப்புக்கு இடையில் அவசர கதியில் பிடிவாதமாக நிறைவேற்றிய பா.ஜ.க. அரசு – அவற்றுக்காகக் காட்டிய அவசரத்தையோ முனைப்பையோ, எல்லோரும் வரவேற்கும் மகளிர் மசோதாவை நிறைவேற்ற கடந்த 9 ஆண்டுகாலமாகக் காட்டவில்லை.
இப்போது, நாடாளுமன்றத் தேர்தல் நெருங்கி வரும் நிலையில், தோல்வி பயம் பா.ஜ.க.வினரை வாட்டி வரும் நிலையில் மகளிருக்கு 33 விழுக்காடு இடஒதுக்கீட்டை வழங்கி – ஒரு சாதனையைச் செய்துவிட்டதாக காட்டிக் கொள்கிறார்கள்.
2016-ஆம் ஆண்டு மார்ச் 8-ஆம் தேதி மகளிர் நாள் அன்று நாடாளுமன்றத்தின் மக்களவை – மாநிலங்களவை ஆகிய இரண்டிலும் அனைத்துக் கட்சிகளையும் சேர்ந்த பெண் எம்.பி.கள் அனைவரும் சேர்ந்து இதற்காக குரல் கொடுத்தார்கள். ’33 விழுக்காடு இடஒதுக்கீடு என்ன ஆனது?’ என்று கேட்டார்கள். அப்போது பா.ஜ.க. அரசு வாய் திறக்கவில்லை. வாய் திறக்க ஏழு ஆண்டுகள் ஆகி இருக்கிறது. பெண்கள் சமுதாயத்தின் மீது உண்மையான அக்கறையில் இந்த மசோதாவைக் கொண்டு வரவில்லை என்பது இதன் மூலம் தெரியவில்லையா?. சாதி வேறுபாடுகளற்ற சமத்துவமும், பாலின சமத்துவமும் நாகரிக சமூகத்தின் அடையாளங்கள் ஆகும். சாதி வேறுபாடுகள் அற்ற சமத்துவத்தை உருவாக்கவே சமூகநீதிக் கோட்பாட்டை தொடர்ந்து வலியுறுத்தி வருகிறோம். பாலின சமத்துவம் என்பது அனைத்து வகையிலும், அனைத்து இடங்களிலும் பெண்ணுக்கு உரிய அதிகாரத்தை வழங்குவது ஆகும். அதற்கு முதலில் அவர்களுக்கு உரிய இடங்களை வழங்க வேண்டும். இதையே தொடர்ந்து திராவிட முன்னேற்றக் கழகம் வலியுறுத்தி வருகிறது. ஆட்சி அமையும் போதெல்லாம் செயல்படுத்திக் காட்டியும் வருகிறது. * பெண்களுக்குச் சொத்தில் சம உரிமமைச் சட்டம். * பெண் காவலர்கள் நியமனம் *அரசுப் பணியிடங்களில் பெண்களுக்கு 40 விழுக்காடு இடஒதுக்கீடு. * உள்ளாட்சித் தேர்தலில் பெண்களுக்கு 33 விழுக்காடு இடஒதுக்கீடு. * பெண்கள் தம் சொந்தக் காலில் நிற்க வசதியாக மகளிர் சுய உதவிக் குழுக்களை அமைத்தது. * ஒடுக்கப்பட்ட சமூகப் பெண்களுக்கு முதலில் பள்ளிக்கல்வி வரை இலவசக் கல்வியும், அதன் பிறகு கல்லூரி வரை இலவசக் கல்வியும் வழங்கப்பட்டது. * ஒன்று முதல் 5 வரையிலான அரசுப் பள்ளி ஆசிரியர்களாக மகளிரை நியமித்த அரசு திமுக அரசு. * கிராமப்புறப் பெண்களுக்குப் பணி நியமனத்தில் முன்னுரிமை கொடுத்தது கழக அரசு. * மகளிருக்குப் பேருந்துகளில் கட்டணமில்லா விடியல் பயணம். * மகளிருக்கு 1000 ரூபாய் உரிமைத் தொகை – ஆகிய பல்வேறு திட்டங்களைச் செயல்படுத்திக் காட்டியது தி.மு.க. அரசு. பெண்களுக்கு உள்ளாட்சி அமைப்புகளில் 33 விழுக்காடு இடஒதுக்கீட்டை முதலமைச்சர் கலைஞர் அவர்கள் 1996-ஆம் ஆண்டு வழங்கினார்கள். ஊராட்சி ஒன்றியம், நகராட்சி, மாநகராட்சி போன்ற உள்ளாட்சி மன்றங்களுக்கான தேர்தல் 1990-ஆம் ஆண்டு இறுதியில் தி.மு.க. ஆட்சியில் அறிவிக்கப்பட்ட பின்னர், கழக ஆட்சி கலைக்கப்பட்டு விட்டது. அதன் பின்னர் நடைபெற்ற ஐந்தாண்டு கால அ.தி.மு.க ஆட்சியில் உள்ளாட்சி மன்றங்களுக்கான தேர்தலை நடத்த அந்த ஆட்சியினர் முன்வரவே இல்லை. 1996-ஆம் ஆண்டு, தி.மு.க வெளியிட்ட தேர்தல் அறிக்கையில் பக்கம் 6-இல், “அடுத்து அமைக்கப்படும் தி.மு.க அரசு, புதிய சட்டமன்றத்தின் முதல் கூட்டத் தொடரிலேயே உள்ளாட்சி மன்றங்களுக்கான தேர்தல் தேதிகளை அறிவிக்கும் என்று உறுதி கூறுவதோடு, அது வெறும் அறிவிப்பாக இருந்து விடாமல், நிச்சயமாக நடைமுறைப்படுத்தப்படும் என்ற உறுதியை அளிக்கிறோம்” என்றும் குறிப்பிட்டிருந்தோம். அவ்வாறு அறிவித்ததற்கிணங்க 96-ஆம் ஆண்டு அக்டோபர் 9 மற்றும் 12 தேதிகளில் உள்ளாட்சித் தேர்தல்கள் நடத்தப்படும் என்று தமிழ்நாடு தேர்தல் ஆணையர் மூலமாக அறிவிப்பு செய்யப்பட்டது. இந்தத் தேர்தலில் முக்கியமானது என்னவென்றால் தமிழ்நாட்டில் உள்ளாட்சித் தேர்தல்களில் முதல் முறையாக பெண்களுக்கு இடஒதுக்கீடு செய்யப்பட்டுத் தேர்தல் நடத்தப்பட்டதுதான். மொத்தமுள்ள ஆறு மாநகராட்சிகளில் திருச்சி மாநகராட்சி மேயர் பதவி பெண்களுக்காக ஒதுக்கப்பட்டது. திருநெல்வேலி மாநகராட்சி பட்டியலின வகுப்பைச் சேர்ந்த பெண்களுக்காக ஒதுக்கப்பட்டது.