மகளிர் இட ஒதுக்கீடு மசோதா எங்களுடையது: சோனியா காந்தி

புதுடெல்லி,.செப். 19: பிரதமர் மோடி தலைமையில், நேற்று மாலை மத்திய மந்திரி சபை கூட்டம் நடைபெற்றது. அப்போது மகளிருக்கான 33 சதவீத இடஒதுக்கீடு மசோதாவிற்கு ஒப்புதல் அளித்ததாக தகவல் வெளியானது.
இதற்கு காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் வரவேற்பு தெரிவித்துள்ளன. இந்த சிறப்பு கூட்டத்தொடரில் மசோதா தாக்கல் செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இன்று பாராளுமன்றத்தின் இரு அவைகளும் பழைய கட்டிடத்தில் இருந்து புதிய கட்டிடத்திற்கு மாற இருக்கிறது. இதுதொடர்பான நிகழ்ச்சிகள் நடைபெற இருக்கின்றன. இதில் கலந்து கொள்வதற்காக காங்கிரஸ் கட்சிக்கான பாராளுமன்ற தலைவர் சோனியா காந்தி வந்தார்.
அப்போது, அவரிடம் மகளிர் 33 சதவீத இடஒதுக்கீடு மசோதா குறித்து கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு சோனியா காந்தி “மகளிர் இடஒதுக்கீடு மசோதா எங்களுடையது” என்றார். ஏற்கனவே, காங்கிரஸ் கட்சியை சேர்ந்த ஜெய்ராம் ரமேஷ், “மத்திய மந்திரி சபை ஒப்புதல் அளித்ததாக வந்துள்ள செய்தியை வரவேற்கிறேன். மசோதாவின் விவரங்களுக்காக காத்திருப்போம்” எனத் தெரிவித்திருந்தார். ப. சிதம்பரம் “மகளிர் இடஒதுக்கீடு மசோதா இன்று தாக்கல் செய்யப்பட்டால், அது காங்கிரஸ் மற்றும் காங்கிரஸ் தலைமையிலான UPA கூட்டணியின் வெற்றியாகும்” எனத் தெரிவித்துள்ளார்.