மகள் விவாகரத்தை கொண்டாடிய தந்தை

ராஞ்சி: அக்.27-
ஜார்க்கண்ட் தலைநகர் ராஞ்சியின் கைலாஷ் நகரை சேர்ந்தவர் பிரேம் குப்தா. இவரது மகள் சாக்சி. கடந்த 2022-ம் ஆண்டு ஏப்ரல் 28-ம் தேதி சாக்சிக்கும் பஜ்ரா பகுதியை சேர்ந்த சச்சின் குமாருக்கும் திருமணம் நடைபெற்றது. ஜார்க்கண்ட் மாநில மின் வாரியத்தில் இளநிலை இன்ஜினீயராக சச்சின் பணியாற்றி வருகிறார்.
திருமணத்துக்குப் பிறகு பஜ்ராவில் உள்ள வீட்டில் புதுமண தம்பதி வசித்து வந்தனர். ஆரம்பம் முதலே சச்சின் குமார், அவரது குடும்பத்தினரின் நடவடிக்கைகள் சந்தேகத்துக்குரிய வகையில் இருந்தன. சில மாதங்களுக்கு முன்பு சாக்சியை வீட்டில் வைத்து பூட்டிவிட்டு சச்சின் குமாரும் அவரது குடும்பத்தினரும் வெளியூர் சென்றுவிட்டனர். சுமார் ஒரு மாதமாக அவர்கள் வீட்டுக்கு திரும்பவில்லை. வீட்டில் இருந்த மளிகை பொருட்களை வைத்து சமையல் செய்து சாக்சி சமாளித்தார். ஆனால் தனக்கு நேர்ந்த கொடுமையை தாய், தந்தையிடம் அவர் கூறவில்லை.ஒருநாள் சச்சின் குமாரின் லேப்டாப்பை சாக்சி பயன்படுத்தினார். அப்போது தனித்தனியாக இரு பெண்களுடன் சச்சின் திருமண கோலத்தில் இருக்கும் புகைப்படங்கள், வீடியோக்களை பார்த்து அவர் அதிர்ச்சியில் உறைந்தார். இதுதொடர்பாக ரகசியமாக விசாரித்து சம்பந்தப்பட்ட இரு பெண்களிடமும் சாக்சி மொபைல் போனில் பேசினார். அப்போது சச்சினுக்கு ஏற்கெனவே இருமுறை திருமணமாகி இருப்பதும் 3-வதாக தன்னை திருமணம் செய்திருப்பதும் தெரியவந்தது.
இதைத் தொடர்ந்து சச்சின் குமாரை விவாகரத்து செய்ய சாக்சி முடிவு செய்தார். இந்த முடிவை தாய், தந்தையிடம் கூறினார். மகளுக்கு நேர்ந்த கொடுமையை அறிந்த பிரேம் குப்தா, மணமகன் குடும்பத்தினருக்கு தகுந்த பாடம் புகுத்த திட்டமிட்டார்.