மகாதீபம் கொப்பரை மலை உச்சிக்கு கொண்டு செல்லப்பட்டது

திருவண்ணாமலை: நவம்பர் 25 – திருவண்ணாமலையில் தீபத்திருவிழா உற்சவத்தின் 10ம் நாள் விழாவை முன்னிட்டு நாளை மாலை 6 மணிக்கு 2,668 அடி உயர மலை மீது மகாதீபம் ஏற்றப்படுகிறது. திருவண்ணாமலை அண்ணாமலைாயார் கோயிலில் பிரசித்தி பெற்ற கார்த்திகை தீபத்திருவிழா கடந்த 17ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி, வெகு விமரிசையாக நடந்து வருகிறது. விழாவின் முக்கிய விழாவான மகாதீப பெருவிழா நாளை (26ம் தேதி) நடைபெற உள்ளது. அதையொட்டி, நாளை அதிகாலை 4 மணிக்கு, அண்ணாமலையார் கோயில் சுவாமி சன்னதி கருவறை எதிரில் பரணி தீபம் ஏற்றப்படும்.
அதைத்தொடர்ந்து, மாலை 6 மணிக்கு, 2,668 அடி உயர மலை மீது மகாதீபம் ஏற்றப்படும். இதற்காக 4,500 கிலோ முதல்தர தூய நெய் ஆவினில் கொள்முதல் செய்யப்பட்டு தயார் நிலையில் கோயிலில் வைக்கப்பட்டுள்ளது. மேலும், மகாதீபம் ஏற்றுவதற்கான ஐந்தரை அடி உயரத்தில் செப்பினால் உருவான மகாதீப கொப்பரை புதிய வண்ணம் தீட்டப்பட்டு, அர்த்தநாரீஸ்வரர் திருவுருவத்துடன் தயார் நிலையில் ஆயிரங்கால் மண்டபத்தில் வைக்கப்பட்டது. மகா தீபம் ஏற்றுவதற்காக 1,200 மீட்டர் துணி திரி, உபயதாரர்கள் மூலம் நேற்று அண்ணாமலையார் கோயில் நிர்வாகத்திடம் வழங்கப்பட்டது.
இந்நிலையில், மகாதீப கொப்பரைக்கு இன்று அதிகாலை 5.30 மணிக்கு அண்ணாமலையார் கோயிலில் சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு, மலை உச்சிக்கு கொண்டு செல்லும் பணி தொடங்கி உள்ளது. இந்த நிகழ்ச்சியில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். சுமார் 200 கிலோ எடையுள்ள தீப கொப்பரையை, தோளில் சுமந்தபடி மலை உச்சிக்கு கொண்டு சென்றனர். அதைத்தொடர்ந்து, மலை உச்சியில் நிலை நிறுத்தப்படும் மகாதீப கொப்பரைக்கு பாரம்பரிய வழக்கப்படி, சிறப்பு வழிபாடுகள் செய்யப்படும். இதனிடையே திருவண்ணாமலை கார்த்திகை தீபத்திருவிழாவை முன்னிட்டு இன்று (25.11.2023) முதல் நவ.27 வரை 10 சிறப்பு ரயில்கள் இயக்கப்பட உள்ளது. வேலூர்-திருவண்ணாமலை, திருவாரூர்-திருவண்ணாமலை, தாம்பரம்- திருவண்ணாமலை, திருச்சி – வேலூர், வேலூர் – திருப்பட்ரிபுலியூர் ஆகிய வழித்தடங்களில் சிறப்பு ரயில்கள் இயக்கப்படும் என ரயில்வே நிர்வாகம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.