மகாபலியை வரவேற்கும் ஓணம் திருநாள்

கோழிக்கோடு, செப்.8
கேரள மக்கள் எந்தவிதமான மத பாகுபாடும் பார்க்காமல் கொண்டாடும் பண்டிகையில், ‘ஓணம் பண்டிகை’ முக்கியமானது. ஒவ்வொரு ஆண்டும் ஆவணி மாத திருவோண நட்சத்திரத்தில் இந்தப் பண்டிகை கொண்டாடப்படுகிறது. இந்தப் பண்டிகை குறித்து பல்வேறு கதைகள் சொல்லப்பட்டாலும், வாமனராக வந்த மகாவிஷ்ணு, மகாபாலி சக்கரவர்த்தியிடம் மூன்று அடி மண் கேட்டு அவரது ஆணவத்தை அடக்கிய நிகழ்வுகளின் ஒரு பகுதியாகவே இந்த ஓணம் பண்டிகை பார்க்கப்படுகிறது. கேரளாவை ஆட்சி செய்த மகாபலி மன்னன், அந்த மக்களின் மீது அளவு கடந்த அன்பு வைத்திருந்தான்.
அசுர குலத்தில் பிறந்திருந்தாலும், பிரகலாதனின் வழிவந்த மகாபலி சக்கரவர்த்திக்கு, மகாவிஷ்ணுவின் மீது பக்தியும் உண்டு. அதே நேரம் அசுர குலத்திற்கே உரிய, தேவர்களை அழிக்க வேண்டும் என்ற கோபமும் உண்டு.
ஒரு முறை மிகப்பெரிய யாகம் ஒன்றை நடத்த மகாபலி முன்வந்தான்.
அந்த யாகத்தில் கலந்துகொள்பவர்களுக்கு, கேட்கும் தானங்களை வழங்கவும் அவன் முடிவு செய்தான்.
இந்த யாகம் நிறைவு பெற்றால் இந்திரனின் பதவிக்கு ஆபத்து வரும் என்பதால், அதனை தடுத்து நிறுத்த தேவர்கள் மகாவிஷ்ணுவிடம் முறையிட்டனர்.இதையடுத்து அவர், வாமனர் என்னும் குள்ள உருவம் எடுத்து, மகாபலி சக்கரவர்த்தி நடத்திய யாகத்திற்குச் சென்றார். அவரிடம் மகாபலி மன்னன், “என்ன தானம் வேண்டும்?” என்று கேட்க, அதற்கு வாமனர் “எனக்கு மூன்று அடி மண் கொடுத்தால் போதும்” என்று கூறினார்.