மக்களவைத் தேர்தலில் பஞ்சாபில் முக்கிய சீக்கிய முகங்கள் இல்லை

பஞ்சாப், மே 29- பஞ்சாபில் 13 மக்களவைத் தொகுதிகளுக்கும் ஏழாம் கட்டமாக ஜுன் 1-ல் வாக்குப் பதிவு நடைபெற உள்ளது. இத்தேர்தலில் கேப்டன் அம்ரீந்தர்சிங், நவ்ஜோத்சிங் சித்து உள்ளிட்ட முக்கிய சீக்கிய முகங்கள் காணப்படவில்லை.பஞ்சாப் மாநில அரசியலில் முக்கிய சீக்கிய முகமாக கருதப்படுபவர் கேப்டன் அம்ரீந்தர் சிங் (82). இவர் காங்கிரஸ் தலைமையிலான ஆட்சியில் இரண்டு முறை முதல்வராக இருந்தார். கடந்த 2021 செப்டம்பரில் முதல்வர் பதவியிலிருந்து இறக்கப்பட்டதால் காங்கிரஸை விட்டு விலகினார். பிறகு தனிக்கட்சி தொடங்கிய அவர், அதனை பாஜகவுடன் இணைந்தார். 1980 முதல் பஞ்சாப் அரசியலின் முக்கிய முகமாக இருந்த கேப்டன் அம்ரீந்தருக்கு உடல்நலக் குறைவு ஏற்பட்டதால் இந்த முறை மக்களவைத் தேர்தலில் தீவிரமாகப் பங்கேற்கவில்லை. இவரது மனைவியான முன்னாள் எம்.பி. பிரனீத் கவுர் பாஜக வேட்பாளராக பாட்டியாலாவில் போட்டியிடுகிறார். கேப்டனை போல், அரசியலில் முக்கிய சீக்கிய முகமாக வளர்ந்தவர் நவ்ஜோத்சிங் சித்து (60). முன்னாள் கிரிக்கெட் வீரரான சித்து, பாஜகவில் இணைந்து 2004-ல் அமிர்தசரஸ் எம்.பி. ஆனார். 2009 தேர்தலிலும் எம்.பி.யாக வென்ற சித்துவை பாஜக 2016-ல் மாநிலங்களவை உறுப்பினராக்கியது.எனினும் சில மாதங்களில் பாஜகவிலிருந்து வெளியேறிய அவர், ‘ஆவாஸ்-எ-பஞ்சாப்’ எனும் பெயரில் தனிக் கட்சி தொடங்கினார். 2017 ஜனவரியில் கட்சியை கலைத்துவிட்டு காங்கிரஸில் இணைந்தார். இதே ஆண்டில் கேப்டன் அம்ரீந்தர் தலைமையிலான அரசில் அமைச்சராக பதவியேற்றார். மாநில காங்கிரஸ் தலைவராகவும் பதவி வகித்தார். 2022 சட்டப்பேரவை தேர்தலில் ஆம் ஆத்மி கட்சியிடம் தோல்வி அடைந்தார். இவரும் மக்களவைத் தேர்தலில் இந்தமுறை தீவிரம் காட்டவில்லை. சிரோமணி அகாலி தளம் கட்சியின் (எஸ்ஏடி) தலைவரான பிரகாஷ் சிங் பாதலும் பஞ்சாப் அரசியலில் முக்கிய சீக்கிய முகமாக இருந்தார். 1997, 2007, 2012-ம் ஆண்டுகளில் தேர்தலில் வென்று பாஜக ஆதரவுடன் பஞ்சாப் முதல்வராக மூன்று முறை பதவி வகித்தார். பாதல் தனது 95 ஆவது வயதில் கடந்த 2023 ஏப்ரலில் காலமானார். என்றாலும் அவரது மருமகள் ஹர்சிம்ரத் கவுர் பாதல், பதிண்டா தொகுதியில் நான்காவது முறையாக போட்டியிடுகிறார். எஸ்ஏடி கட்சியிலிருந்து நீக்கப்பட்டதால் ‘சிரோமணி அகாலி தளம் சன்யுக்த்’ என்ற புதிய கட்சி தொடங்கியவர் சுக்தேப்சிங் தின்ஸா. பஞ்சாப் அரசியலின் முக்கிய சீக்கிய முகமான இவர் 4 வருடங்களுக்கு பிறகுகடந்த ஏப்ரலில் மீண்டும் எஸ்ஏடி-யில் இணைந்தார்.தனது மகன் பர்மீந்தர் தின்ஸாவுக்கு போட்டியிடும் வாய்ப்பு கிடைக்காததால் இத்தேர்தலில் அமைதியாகி விட்டதாகத் தெரிகிறது. பஞ்சாபில் காங்கிரஸ் மற்றும் எஸ்ஏடி ஆட்சியில் இல்லாத முதல் தேர்தலாக இது அமைந்துள்ளது. அதேபோல், 28 வருடங்களுக்கு பிறகு பஞ்சாபில் எஸ்ஏடியும் பாஜகவும் கூட்டணி இன்றி தனித்தனியே போட்டியிடுகின்றன.