மக்களவை தேர்தலில் போட்டியிடும் கட்சிகளின் எண்ணிக்கை 104% உயர்வு

புதுடெல்லி, மே 30- கடந்த 2009-ம் ஆண்டு முதல் தற்போது வரை மக்களவை தேர்தலில் போட்டியிட்ட கட்சிகளின் எண்ணிக்கை குறித்த ஆய்வை ஜனநாயக சீர்திருத்த சங்கம் மேற்கொண்டது. அதில் கூறியிருப்பதாவது: கடந்த 2009-ம் ஆண்டில் மொத்தம் 368 கட்சிகள் மக்களவை தேர்தலில் போட்டியிட்டன. இந்த எண்ணிக்கை கடந்த 2014-ல் 464-ஆக உயர்ந்தது. 2019-ல் 677-ஆக அதிகரித்தது. தற்போது நடைபெறும் மக்களவை தேர்தலில் 751 கட்சிகள் போட்டியிட்டுள்ளன. இது கடந்த 2009-ம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் 104% உயர்வு.இந்த தேர்தலில் மொத்தம் 8,360 வேட்பாளர்கள் போட்டியிட்டுள்ளனர். இவர்களில் 1,333 பேர் தேசிய கட்சிகளை சேர்ந்தவர்கள், 532 பேர் மாநில கட்சிகளைச் சேர்ந்தவர்கள். 2,580 பேர் பதிவு செய்யப்பட்ட அங்கீகரிக்கப்படாத கட்சிகளைச் சேர்ந்தவர்கள். 3,915 பேர் சுயேச்சைகள். குற்ற வழக்குகள்: தேசிய கட்சிகளில் 443 வேட்பாளர்கள் மீது குற்ற வழக்குகள் உள்ளன. 295 பேர் கடுமையான குற்ற வழக்குகள் உள்ளன. மாநில கட்சிகளில் 249 வேட்பாளர்கள் மீது குற்ற வழக்குகளும், 169 பேர் மீது கடுமையான குற்ற வழக்குகளும் உள்ளன. பதிவு செய்யப்பட்ட அங்கீகரிக்கப்படாத கட்சிகளில் 401 வேட்பாளர்கள் மீது குற்ற வழக்குகளும், 316 பேர் மீது கொடிய வழக்குகளும் உள்ளன. சுயேச்சைகளில் 550 பேர் குற்ற வழக்குகளும், 411 மீது கடுமையான குற்ற வழக்குகளும் உள்ளன. கோடீஸ்வரர்கள்: தேசிய கட்சிகளில் 906, மாநில கட்சிகளில் 532, பதிவு செய்யப்பட்ட அங்கீகரிக்கப்படாத கட்சிகளில் 572, சுயேச்சைகளில் 673 வேட்பாளர்கள் கோடீஸ்வரர்களாக உள்ளது அவர்கள் தாக்கல் செய்த மனுக்கள் மூலம் தெரியவந்துள்ளது.