மக்களிடம் கருத்து கேட்கும் பிஜேபி

சென்னை: பிப்ரவரி. 10 – தேர்தல் அறிக்கையில் இடம்பெறும் முக்கிய அம்சங்கள் குறித்து பொதுமக்களின் கருத்துகளை பாஜக கேட்கவுள்ளது. முதற்கட்டமாக இப்பணி விருதுநகர், திருச்சியில் இன்று தொடங்குகிறது.மக்களவைத் தேர்தல் விரைவில் நடைபெறவுள்ள நிலையில், அனைத்துக் கட்சிகளும் தேர்தல் பணிகளை முடுக்கிவிட்டுள்ளன. தமிழகத்திலும் திமுக, அதிமுக, பாஜக உள்ளிட்ட கட்சிகள் கூட்டணி,தொகுதிப் பங்கீடு குறித்து பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றன. அதேபோல், தேர்தல் அறிக்கை தயாரிப்பதிலும் திமுக, அதிமுக உள்ளிட்ட கட்சிகள் தீவிரமாக ஈடுபட்டுள்ளன.
இந்நிலையில், தமிழகத்துக்கான சிறப்பு திட்டங்களை தேர்தல்அறிக்கையில் இடம்பெற வைப்பதற்கான பணிகளை பாஜகவும் தொடங்கியுள்ளது. இதற்காக, மக்களவை தேர்தல் மேலாண்மைக் குழுவை பாஜக நியமித்துள்ளது.ஹெச்.ராஜா தலைமையில் குழு: பாஜக மூத்த தலைவர் ஹெச்.ராஜா தலைமையிலான இந்தக் குழுவில், மாநில துணைத்தலைவர் கே.பி.ராமலிங்கம், பொதுச் செயலாளர் ராம சீனிவாசன், முன்னாள் எம்.பி எஸ்.கே.கார்வேந்தன் உள்ளிட்டோர் இடம்பெற்றுள்ளனர்.
இந்தக் குழு, தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு, விவசாயிகள், வணிகர்கள், பொதுமக்கள் உள்ளிட்ட அனைத்து தரப்பு மக்களையும் சந்தித்து, அவர்களது பிரச்சினைகள், புதிய திட்டங்களை செயல்படுத்துவது உள்ளிட்ட பல்வேறு கருத்துகளைக் கேட்க உள்ளது.